தாலிக்கு தங்கத்துடன் பட்டுப்புடவை: வாக்குறுதி தரும் EPS.. திட்டம் நிறுத்தப்பட்டது எதனால்?
”அதிமுக வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, ஆட்சியமைக்கும் போது திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறப்படுத்தப்படுவதோடு, கூடுதலாக பட்டுப்புடவையும் வழங்கப்படும்” என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க முன்னணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை வேகமெடுத்து வரும் நிலையில், கட்சிகள் என்ன மாதிரியான தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கப்போகிறது என்பதும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்பினை கிளப்பியுள்ளது.
அந்த வகையில், இன்று தஞ்சாவூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் போது, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் பட்டுப்புடவையும் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் பின்னணி:
1989 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது திருமணத்திற்காக ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவியானது ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, திருமண உதவித்தொகையினை ரூ.50,000-ஆக உயர்த்தியதுடன், தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்கப்பட்டு வந்ததை 8 கிராம் என உயர்த்தியது. இந்த திட்டத்தின் படி, பட்டப்படிப்பு படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும், ரூ.50,000- நிதியுதவியும், பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கத்துடன் ரூ.25,000- நிதியுதவியும் வழங்கப்பட்டு வந்தது.
திட்டத்தை மாற்றிய திமுக:
2021 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த அரசு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டியது.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் (2022-2023) புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு-
”தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு /பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம். டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என அறிவித்தார்.
வரவேற்பும் - எதிர்ப்பும்:
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்ட போது தாலிக்கு தங்கம் வழங்குவது நிறுத்தப்பட்டது. மறைந்த ஜெயலலிதா அவர்களால் தொடங்கியத் திட்டம் என்பதால் தான் திமுக அரசு இதனை முடக்கியுள்ளதாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தாலிக்கு தங்கம் வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில் 24.5 சதவீத பயனாளிகள் மட்டுமே தகுதியான பயனாளிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மேலும் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 43 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
அதே சமயம், உயர்நிலைக் கல்வியில் சேரும் பெண்களின் விகிதம் 46 சதவீதம் மட்டுமே உள்ளது. கல்வியே நிரந்தரச் சொத்து என்ற நோக்கில் தான் தாலிக்கு தங்கம் வழங்கக்கூடிய திட்டம், அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
திமுகவின் நடவடிக்கையால் இந்த திட்டத்தின் வாயிலாக நடைப்பெற்ற முறைகேடு போன்றவை தவிர்க்கப்படும் என ஒரு தரப்பினர் வரவேற்பு அளித்தனர். மறுப்புறம் அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர்.
தற்போது பெண்களின் வாக்குகளை கவரும் வகையில், தேர்தல் வாக்குறுதியாக இதனை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்கம் விலை கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(கட்டுரையாளர்: MUTHUKRISHNAN )
What's Your Reaction?






