ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா.. மாவேயிஸ்ட் மொழியில் பேசும் ராகுல்: ஹெச்.ராஜா ஓபன் டாக்

”தி.மு.க. மொழியில்தான் ஜோசப் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் கண்டிப்பாக திமுக கூட்டணி வாக்குகள் பெரியளவில் பிரியும். மற்றபடி ஜோசப் விஜய்யால் எந்த மாற்றத்தையும் அரசியலில் ஏற்படுத்த முடியாது” என ஹெச்.ராஜா பேசியுள்ளார்.

ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா.. மாவேயிஸ்ட் மொழியில் பேசும் ராகுல்: ஹெச்.ராஜா ஓபன் டாக்
stalin has selective amnesia: Bjp h raja

எம்.ஜி.ஆர் முதல் விஜய்வரை சினிமாவிலிருந்து அடுத்தடுத்து அரசியல் அவதாரம் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அரசியலில் இருந்து சினிமாவில் குதித்தவர்கள் ஒரு சிலர்தான். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா. 'கந்தன்மலை' படம் மூலம் முறுக்கு மீசை, ருத்ராட்ச மாலையுடன் ரசிகர்களை ஒருவித பதற்றத்துக்கு ஆளாக்கியிருக்கும் அவரிடம் பேசினோம்.

'கந்தன் மலை' படம் மட்டும்தானா... இல்லை, தொடர்ந்து நடிப்பீர்களா?

தாமரை மீடியாவில் 'கந்தன் மலை’ என ஒரு யூடியூப் படம் தயாரிப்பதாகவும், அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். படத்தின் இயக்குநரும் என் கதாபாத்திரத்தை சொல்லி நீங்கள் தான் நடிக்கவேண்டும்? என தொடர்ந்து வலியுறுத்தினார். அதனால் சம்மதித்தேன். படத்துக்கான வேலை மங்களகரமாக துவங்கியுள்ளது. இதற்குப் பிறகு என்மேல் விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தேடி வந்து நடிக்க வற்புறுத்தினால் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்பேன்.

கவர்னர் பதவி உங்களை தேடி வரப்போவதாக சொல்லப்படுகிறதே?

பாஜக தேசிய தலைமையில் இருப்பவர்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்படுகிறவர்களில் நானும் ஒருவன். என்ன பொறுப்பை தலைமை கொடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். எதிர்காலத்தை இப்போதே கணிக்க முடியாது.

சமீபத்தில் வெளியான புதிய நிர்வாகிகள் பட்டியலில் உங்களுக்கு திருப்தியா, அதிருப்தியா?

கட்சி நிர்வாகிகள் பட்டியல் மையக்குழுவில் முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு தேசிய தலைமையின் அனுமதியுடன் வெளியானது. இதில் திருப்தி, அதிருப்தி பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சி நிர்வாகிகள் எந்தவித பாகுபாடின்றி அனைவருடனும் இணைந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரில் யார் சிறந்த தலைவர்?

எப்போதுமே கன்டன்ட் ஒன்றுதான். 'பிரசென்டேஷன்' வேண்டுமானால் மாறுபடலாம். பா.ஜ.க.வின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள் என்பது கட்சியில் இருக்கும் எல்லோருக்கும் பொதுவானது. அதை அவரவர் பிரசென்ட் செய்வதில் வேறுபாடுகள் இருக்கும். மையக்குழுதான் கட்சியை வழிநடத்துகிறது. மையக்குழு முடிவுகளை அவரவர் தங்களுக்குரிய பாணியில் சொல்கிறார்கள். எனவே இதில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடம் கிடையாது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறதா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அ.தி.மு.க.வும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்த ஆறு மணி நேரத்துக்குள் தி.மு.க எம்.பி கனிமொழி அலறியதைப் பார்க்க முடிந்தது. கூட்டணி ஆட்சி என்றுதான் எப்போதும் சொல்வார்கள். கூட்டணியில் அங்கம் வகிப்பதா அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பதா என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும். தேர்தலுக்குப் பிறகு இது முடிவாகும். இப்போதே இதை எல்லோரும் விவாதிப்பதன் காரணம் எப்படியாவது கூட்டணியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்பது தான். இந்த வலையில் சிக்க பாஜக தயாராக இல்லை.

ராகுலுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் கண்டனம் தெரிவித்து இருக்கிறதே?

நாட்டு நலனுக்கு விரோதமாக மாவோயிஸ்ட்டுகள் மொழியில் ராகுல் பேசிக்கொண்டிருக்கிறார். தேசத்தை எதிர்ப்பவர் தேச துரோகிதான். தேசநலன் விவகாரத்தில் கீழ்த்தரமாக காங்கிரஸ் செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது.

தி.மு.க ஆட்சியில்தான் அதிக அளவில் கோயில் குடமுழுக்குகள் நடந்ததாக சொல்கிறாரே அமைச்சர் சேகர்பாபு?

தன் முதுகில் தானே தட்டிக்கொடுத்துக் கொள்ளும் மோசமான பழக்கம் சேகர்பாபுவுக்கு இருக்கிறது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விமர்சையாக நடந்ததே. அதற்கு 206 கோடி ரூபாய் நன்கொடையாக வந்தது. அரசாங்கத்தின் சார்பில் ஒரு பைசாகூட செலவழிக்கப்படவில்லை. எங்கள் கோயில் பனத்தை எடுத்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு பெருமை தேடிக்கொள்வது என்ன நியாயம்? தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் 1,800 கோயில்கள் சிதிலமடைந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கோயிலிலாவது அரசு சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுண்டா? நல்ல நிலையில் இருக்கும் கோயில்களுக்கு கொடையாளர்கள் வழங்கும் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தியதில் உங்களுக்கு என்ன பெருமை?

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்கிறாரே ஸ்டாலின்?

ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது. தமிழகத்தில் 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி மட்டும் வெற்றிபெற்றார். சட்டமன்றத்துக்குத் தனியாக போக பயந்த கருணாநிதி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாரா, இல்லையா? 2026ல் நடக்கப்போகும் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது. ஸ்டாலின் தோற்றுப்போனால்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தமிழகத்தில் இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைப்பது சாத்தியமா?

அதற்கான பூர்வாங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. 'நாங்கள் ராமர் படத்துக்கு செருப்புமாலை போட்டோம். அதனால் எங்களுக்கு அதிக எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர் என்று ஒருகாலத்தில் மார் தட்டிய கூட்டம் திமுக, தற்போது 'நாங்களும் இந்துக்கள்தான். திமுகவில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள்' என சொல்லும் நிர்ப்பந்தத்திற்கு காரணம் இந்து வாக்கு வங்கி உருவானதுதான்.

நடிகர் விஜய்யால் வரக்கூடிய தமிழக சட்டசபைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

தி.மு.க. மொழியில்தான் ஜோசப் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் கண்டிப்பாக திமுக கூட்டணி வாக்குகள் பெரியளவில் பிரியும். மற்றபடி ஜோசப் விஜய்யால் எந்த மாற்றத்தையும் அரசியலில் ஏற்படுத்த முடியாது. கேரவனுக்குள் இருந்துகொண்டு கேமரா முன்பு நடித்தவர்கள் பொதுவெளியில் வந்து பெரிதாக சாதித்தது கிடையாது. அதை காவம் அவருக்கு உணர்த்தும்.

(கட்டுரையாளர்: கு.கணேஷ்குமார்/ குமுதம் ரிப்போர்ட்டர்/ 12.08.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow