Tripti Bhatt: 16 அரசு வேலைகளை ரிஜெக்ட் செய்து IPS அதிகாரியான பெண்!

ஏதாவது ஓர் அரசு வேலை கிடைப்பதே இந்தக் காலத்தில் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால், தமக்குக் கிடைத்த 16 அரசு வேலைகளை நிராகரித்து, ஐ.பி.எஸ் ஆகியுள்ளார், திரிப்தி பட்.

Tripti Bhatt: 16 அரசு வேலைகளை ரிஜெக்ட் செய்து IPS அதிகாரியான பெண்!
tripti bhatt achieved ips dream after rejecting 16 govt jobs

மத்திய அரசால் நடத்தப்படும். 'யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' (UPSC) தேர்வுகளில் வெற்றி பெறுவது சவாலான விஷயம். உயரிய பணிகளில் நியமிக்கத் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்தப் போட்டித் தேர்வுகளில் மிகவும் கறாரான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தேர்வுகளில் கலந்து கொண்டாலும் கூட, சிலர் மட்டுமே அரிதாகத் தேர்வாகின்றனர்.

அப்படிப்பட்ட தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தவர்தான், திரிப்தி பட்! உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா பகுதியைச் சேர்ந்த இவருடைய குடும்பத்தில் பலரும் ஆசிரியர்கள். நான்கு உடன்பிறப்புகளில் இவரே மூத்தவர். 12-ம் வகுப்பை கேந்திரிய வித்யாலயாவில் முடித்துவிட்டு, பன்ட்நகர் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் பட்டம் பெற்றார். நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றினார்.

போட்டித் தேர்வுகள் பலவற்றை எழுதிய இவரைத் தேடி, 16 அரசு வேலைகள் வந்துள்ளன. ஆனால், இவருடைய சிந்தனை, UPSC தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்பதிலேயே இருந்துள்ளது. எனவே, அந்த 16 வேலைகளை நிராகரித்துள்ளார். அவற்றுள் ISRO-வின் பணிவாய்ப்பும் ஒன்று! இவருடைய ஐ.பி.எஸ் கனவுக்குத் தூண்டு கோலாக, இவர் 9-ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம் ஒன்று அமைந்தது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, திரிப்திக்குக் கிடைத்துள்ளது. தம் கைப்பட அப்போது அவர் எழுதிக்கொடுத்த வாழ்த்துக் குறிப்பு, தாமும் நாட்டுக்குச் சேவை செய்யும் உயரிய பணிக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்தை இவருக்குக் கொடுத்திருக்கிறது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் தேர்வில் தமது முதல் முயற்சியிலேயே 165 வது ரேங்க் பெற்று ஐபி.எஸ் ஆனார். தமது சொந்த மாநிலமான டேராடூனில், காவல் கண்காணிப்பாளராகப் பணி நியமனம் பெற்றார்.

பின்னர், சமோலியிலும் பணியாற்றினார். அதன்பிறகு, தெஹ்ரி கார்வால் மாவட்டத்தில் ஸ்டேட் டிஸாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபண்ட் அமைப்பில் கமாண்டராகப் பணியாற்றினார். தற்போது, டேராடூனில் 'நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அமைப்பில்' எஸ்பி பொறுப்பு வகிக்கிறார், தன்னம்பிக்கை நிரம்பிய இந்த இளம்பெண்.

(கட்டுரையாளர்: ஜி.வி,ரிதன்யா/குமுதம் சிநேகிதி 24.7.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow