எவ்வளவு குளறுபடி? குரூப் 4-க்கு மறுதேர்வு நடத்த இபிஎஸ் கோரிக்கை!
சமீபத்தில் நடந்த முடிந்த குரூப்-4 தேர்வு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், தேர்வினை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தக் கோரிக்கை வைத்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3,935 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில், தமிழ் பாடத்திட்ட கேள்விகள் மிக கடினமாக இருந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், தேர்வர்கள் எழுதிய விடைத்தாள்கள் அடங்கிய பெட்டி முறையாக சீல் வைக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளிவந்தன.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சில கேள்விகளை அரசுக்கு முன்வைத்து, மறுத்தேர்வு தொடர்பான கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். அவரது பதிவின் விவரம் பின்வருமாறு-
”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) கடந்த ஜூலை 12, 2025 அன்று குரூப்-4 தேர்வு, ஆரம்பம் முதலே பல்வேறு குளறுபடிகளுடன் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பல லட்சம் இளைஞர்களின் எதிர்கால கனவுகளைத் தாங்கி நடக்கும் இத்தேர்வில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
தேர்வு தொடங்குவதற்கு முன்னரே, மதுரைக்கு வந்த வினாத்தாள் அடங்கிய பெட்டி ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் முறையாக சீல் செய்யப்படாமல், வெறும் A4 தாள் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது வினாத்தாள்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது.
தேர்வின்போது, வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், பாடத்திட்டத்திற்கு (Syllabus) அப்பாற்பட்டு இருந்ததாகப் பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தேர்வர்களின் தயாரிப்புக்கு முரணானது என்றும், நியாயமற்றது என்றும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீல் செய்யப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
குரூப்-4 பதவிகளில் ஒன்றான கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவி, தமிழ்நாடு அரசின் அடிப்படை நிர்வாகப் பணியின் வேர் போன்றது. சாதி, மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான பதவி இது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கான தேர்வு, எந்தவிதக் குளறுபடியும் இன்றி மிகக் கவனமாக நடத்தப்பட வேண்டியது அவசியம்.
ஆனால், தற்போது ஆட்சி செய்யும் அரசு, இந்தத் தேர்வை மிகுந்த மெத்தனப் போக்கில் நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையுடன் விளையாடியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், விரைந்து மறுதேர்வு நடத்த வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், குரூப்-4 தேர்வில் நிகழ்ந்த இந்தக் குளறுபடிகள் குறித்து, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
What's Your Reaction?






