அமரன் பட சர்ச்சை:  “இந்திய ராணுவம் வரை சென்ற கதை”- இயக்குநர் சொன்ன பரபரப்பு தகவல்

அமரன் திரைப்படம் ராணுவம் சம்மந்தப்பட்ட படம் என்பதால் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.

Nov 11, 2024 - 12:15
அமரன் பட சர்ச்சை:  “இந்திய ராணுவம் வரை சென்ற கதை”- இயக்குநர் சொன்ன பரபரப்பு தகவல்

அமரன் திரைப்படத்தின் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் எதையும் திணிக்கவில்லை என படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் நிஜ வாழ்க்கையை தழுவி அமரன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் சினிமா பயணத்தில் முதல் ரூ.200 கோடி வசூலித்த படம் என கூறப்படுகிறது. அமரன் திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்த நிலையில், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அமரன் திரைப்படம் இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை அடிப்படையாக கொண்டது என்பதால் விருதுநகர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகம் கொண்ட ராணுவ கிராமம் என்று சொல்லப்படும் ஊர்களில் உள்ளவர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு படையெடுத்து செல்கின்றனர்.மேலும் இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாருக்கு நடிகர் சிவகார்த்தியேன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். முன்னதாக இந்த படம் குறித்து பேசியுள்ள சிவகார்த்திகேயன், அமரன் திரைப்படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். இந்த படம் என் தந்தையை நினைவு கூர்ந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்துள்ளதாக கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தமிழகம் முழுவதும் அமரன் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அமரன் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.மேலும் அமரன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உரிமையாளர் கமல்ஹாசன் அலுவலகம், வீடு முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அமரன் பட சர்ச்சை குறித்து படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமரன் திரைப்படத்தின் கதை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் பெற்ற கதையாகும். ஏடிஜிபிஐ குறித்து இணையத்தில் தேடிப்பார்த்தால் தெரியவரும். ராணுவம் சார்ந்த கதைகளுக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்பது தெரியும். அமரன் திரைப்படம் ராணுவம் சம்மந்தப்பட்ட படம் என்பதால் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது. என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களையோ, அரசியலையோ எடுக்கக்கூடிய படம் இல்லை. அதேபோல் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் திணிக்கப்படவில்லை. சமூக பொறுப்பு எங்களுக்கும் உள்ளது” என  தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow