கூவத்தூரில் ஏலம் விடப்பட்டு வந்தவர் அல்ல எங்கள் முதலமைச்சர் - இபிஎஸ்ஸை சாடிய அமைச்சர் சேகர்பாபு
தமிழக முதலமைச்சர் 56 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருக்கிறார். பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்துள்ளார்.இதில் ஒரு முறை கூட ஊழலுக்காக அவர் சிறை சென்றவர் அல்ல.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஊர்ந்து வந்து முதலமைச்சர் பதவியை பெற்றவர் அல்ல மு.க.ஸ்டாலின் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் புனரமைப்பு பணிகளுக்காக பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. பின்னர் இங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 75 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் பாரிமுனை பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பாரிமுனை பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில் பாரிமுனை பேருந்து முனையம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான கால ஆய்வுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் 200 சாலையோர கடையில் உள்ளது. இந்த 200 கடைகளுக்கு மாற்று இடம் வழங்கவுள்ளது. இதில் 41 சாலை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேல் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மறு கட்டமைப்பு நடைபெற்று வருகிறது. இதில் உள்ள குடியிருப்பு பகுதிகள் சாலையோரம் வியாபாரிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.5,444 கோடி செலவில் வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை வெள்ள காலங்களில் திமுக வீடுகளில் பதுங்கி இருக்கக்கூடிய கட்சி அல்ல. மாறாக மழை வெள்ள நேரங்களில் களத்தில் நின்ற மக்களுக்கு உதவி செய்தவர்கள் திமுகவினர்.தமிழக முதலமைச்சர் 56 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருக்கிறார். பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்துள்ளார்.இதில் ஒரு முறை கூட ஊழலுக்காக அவர் சிறை சென்றவர் அல்ல.10 ஆண்டு காலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஊர்ந்து வந்து முதலமைச்சர் பதவியை பெற்றவர் அல்ல மு.க.ஸ்டாலின். அதேபோல் கூவத்தூரில் ஏலம் விடப்பட்டு ஏலத்தால் வந்தவர் அல்ல முதலமைச்சர் மு.க ஸ்டாலின்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
What's Your Reaction?