அனிருத்தை கடத்தி பக்கத்தில் வச்சுக்குவேன்.. விஜய் தேவரகொண்டா பேச்சு

”கிங்டம் திரைப்படம் பழைய ரஜினிகாந்த் சார் படங்களைப் போல இருக்கும்” என விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் பேசியுள்ளார்.

அனிருத்தை கடத்தி பக்கத்தில் வச்சுக்குவேன்.. விஜய் தேவரகொண்டா பேச்சு
vijay deverakonda praises anirudh and suriya at kingdom chennai event

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவரகொண்டா சென்னையில் தமிழ் ஊடகங்களை சந்தித்து படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்” திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய் தேவரகொண்டா “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.

இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையைச் சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இந்தப் படம் உணர்ச்சிமிக்க காட்சிகளும், அதிரடியான சண்டைக் காட்சிகளும் கலந்த ஒன்று. கிங்டம் திரைப்படம் ரஜினிகாந்த் சார் படங்களைப் போல இருக்கும். ஆந்திரா, தெலங்கானா முழுவதும் படத்திற்கான புரோமோஷன்கள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து புரோமோட் செய்வதென்றால், அது சென்னை மட்டுமே! எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும்.”

சூர்யாவிற்கு நன்றி:

சூர்யா அண்ணா செய்த உதவிக்கு நன்றி. "நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணும்... இல்லன்னா பரவாயில்லை" என்று தயங்கி தான் சூர்யா அண்ணாவிடம் கேட்டேன். ஆனால் அவர் எந்த தயக்கமுமின்றி டீசருக்காக பின்னணியில் பேச ஒப்புக்கொண்டார்.

அனிருத் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ப்ரீ-ரிலீஸ் இவென்ட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், அடுத்த நாளே சென்னை வந்து படம் ஓவர்சீஸ் காப்பிக்காக இறுதி பணிகளை மேற்கொண்டு வருகிறார். என்னால் முடியுமானல், அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். அனிருத், கிங்டம் படத்தின் 40 நிமிடம் குறித்து பாராட்டியது படம் மீதான எதிர்ப்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. என் வார்த்தைகளை எல்லோரும் நம்ப மாட்டாங்க, ஆனா அனிருத் சொன்னா நம்புவாங்க.

இந்த கதாபாத்திரத்துக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.

விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது. நான் ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போது, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் என்னை ஒரு குடும்ப உறவினராகவே பார்க்கிறீர்கள். இது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow