வடமாவட்டங்களின் வெற்றியை தீர்மானிக்குமா விசிக? ஆதவ் அர்ஜூன் கணிப்பின் உண்மைத்தன்மை என்ன?

வடமாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்திற்கு விசிக வந்துவிட்டதாக ஆதவ் அர்ஜூன் கூறுவதன் உண்மைத்தன்மை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. 

Sep 24, 2024 - 17:24
வடமாவட்டங்களின் வெற்றியை தீர்மானிக்குமா விசிக? ஆதவ் அர்ஜூன் கணிப்பின் உண்மைத்தன்மை என்ன?

2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து சிறு சிறு கட்சிகளாக 7 கட்சிகள் இருந்தன. அதிமுக கூட்டணியில் அதிமுகவை தவிர்த்து வேறு பெரிய கட்சிகள் இடம்பெறவில்லை. அக்கூட்டணியில் அதிகபட்சமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரிக்கு மட்டும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாஜக, பாமக மற்றும் நாம் தமிழர்கள் கட்சிகள் தனித்து நின்றன.

தேர்தல் முடிவுகளில் நெருக்கோட்டில் தான் திமுக தோல்வியடைந்தது. ஏனென்றால் அதிமுக 136 இடங்களை கைப்பற்றியது திமுக கூட்டணி மொத்தம் 98 இடங்களை கைப்பற்றியது. கோயில்பட்டி, கரூர், தென்காசி, பர்கூர், பேராவூரணி உள்ளிட்ட 35 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். குறிப்பாக ராதாபுரத்தில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு மக்கள் நல கூட்டணியும் ஒரு காரணம் என்று கூறலாம். திமுக வாக்குகளைதான் மக்கள் நல கூட்டணிக்கு சென்றது. 

அதே சமயம் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்டவர்களில் காட்டுமன்னார் கோயிலில் போட்டியிட்ட திருமாவளவன் மற்றும் தனி தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் ராமச்சந்திரனை தவிர்த்து மற்ற அனைவருமே 3ஆம் இடமே பிடித்தனர். மொத்தமாகவே 6% வாக்குகள்தான் பெற்றன. விசிக போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையில் 1% வாக்குகளே பெற்றன. 2021 தேர்தலிலும் அதே நிலைதான். அதே சமயம் 41 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியதும் திமுக ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு ஒரு காரணம். ஏனென்றால் 41க்கு வெறும் 9 இடங்களே வெற்றி பெற்று இருந்தனர். அதில் திமுக வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்கள். தற்போது என்ன பிரச்னை என்றால் மாநிலத்தில் கூட்டாட்சி என்ற கருத்தை விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பதுதான். மாநில சுயாட்சி என்பதை அழுத்தமாக கூறி வரும் திமுக ஒருபோதும் மாநிலத்தில் கூட்டாட்சி தத்துவத்தை ஒத்துக்கொள்ளாது. அதே சமயம் அதிகார பகிர்தல் தங்களது கட்சியின் கொள்கையில் ஒன்று.

தொல் .திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் புத்தகத்தில் ஆட்சிமுறையை பற்றி முழுமையாக தெளிவாக எழுதிருப்பார். தங்களின் பலம் என்ன என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் திருமாவளவன். மநகூட்டணி போல் மீண்டும் அமைந்து விடக்கூடாது மற்றும் சாதி, மதவாத கூட்டணியில் இடம்பெற கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளார். அதே சமயம் அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவினர் பெருவாரியாக திமுகவிற்கோ அல்லது வேறு கட்சிகளுக்கோ செல்லவில்லை. வெகுசிலரே பாஜவுக்கும் திமுகவிற்கும் சென்றனர். ஆக அதிமுக வாக்குகள் அப்படியே உள்ளது ஆனால் அவை இபிஎஸ், ஒபிஎஸ், சசிகலா, தினகரன் என்று பிரிந்துள்ளது. வடமாவட்டங்களில் பாமக தங்களது வாக்கு வங்கியை அப்படியே வைத்துள்ளது. திமுக, பாஜக, நாதக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளில் பெருவாரியான அடுத்தக்கட்ட தலைமுறையினர் சேர்ந்து கொண்டுதான் உள்ளனர். ஆளுங்கட்சியாக இருப்பதால் திமுகவிற்கு சற்று அதிகப்படியான வளர்ச்சி பெற்று வருகிறது. 

வடமாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் விசிக என்ற அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் கணிப்பே தவறு என்பதை அக்கட்சியின் முன்னணி தலைவர்களான ரவிக்குமார், சிந்தனைசெல்வன், வன்னியரசே ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் இக்கருத்தை எதனடிப்படையில் அவர் கூறுகிறார்? தமிழ்நாட்டு அரசியல் நிலவரத்தை பொறுத்தமட்டில் விசிகவிற்கு மொத்தம் 4 வழிகள்தான் உள்ளது.

1.திமுக கூட்டணி
2.அதிமுக கூட்டணி
3.விசிக தலைமையில் புதிய கூட்டணி
4.பாஜக கூட்டணி

திமுக கூட்டணியில் சீட் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் அல்லது அதிமுக கூட்டணி செல்லலாம் இது இரண்டும்தான் சாத்தியகூறு உள்ளவை. மக்கள் நல கூட்டணியை ஏற்படுத்திய போது என்ன நடந்தது என்பதை திருமாவளவன் நன்கு அறிந்திருப்பார் ஏனென்றால் 3 ஆப்ஷனுக்கும், 4 ஆப்ஷனுக்கு செல்வதில் சாத்தியகூறில்லை. அதே சமயம் அதிமுக கூட்டணியில் பாஜகவோ அல்லது பாமகவோ இடம்பெறும்பட்சத்தில் விசிக அங்கு செல்லவும் வாய்ப்பிருக்காது.

 - மா.நிருபன் சக்கரவர்த்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow