PF தொகையினை புது நிறுவனத்திற்கு மாற்றணுமா? வந்தாச்சு புது ரூல்ஸ்!
நாம் வேலை மாறும்போது, PF தொகையினை பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றும் முறையினை எளிதாக்கியுள்ளது EPFO (Employees' Provident Fund Organisation).

நாம் பணிபுரியும் நிறுவனங்களில் வருங்கால வைப்பு நிதி பிடிப்பார்கள். பெரும்பாலனோர் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் நிலையில், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு நாம் மாறும் போது PF தொகையினை பழைய நிறுவனத்தின் கணக்கிலிருந்து புதிய நிறுவனத்தின் கணக்கில் மாற்றும் செயல்முறையானது கொஞ்சம் சிக்கலாக இருந்தது.
அதாவது PF தொகையினை மாற்றும் செயல்முறையானது இரண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஒன்று நமது பழைய நிறுவனம், மற்றொன்று புதிய நிறுவனம். நாம் PF தொகையினை மாற்ற விரும்பும் போது, இரண்டு நிறுவனங்களின் ஏதோ ஒன்றின் ஒப்புதல் மற்றும் பீல்டு ஆபிசர் சரிபார்பிற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
தற்போது இந்த செயல்முறையினை எளிதாக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட படிவம் 13 மென்பொருள் செயல்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நாம் பணம் பரிமாற்றக் கோரிக்கை விடுக்கும் போது, பழைய அலுவலகம் சார்பில் அங்கீகரிக்கப்பட்டவுடன் முந்தைய நிறுவனத்தில் கணக்கிலுள்ள பணம் தானாகவே புதிய நிறுவனத்தின் பி.எப் கணக்கிற்கு பரிமாற்றம் ஆகிவிடும். இதனால், பல நாட்கள் காத்திருக்கும் தேவை இனி இருக்காது.
இந்த புதிய முறையின் மூலம் சுமார் 1.25 கோடி பணியாளர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஓவ்வொரு ஆண்டும் 90,000 கோடி அளவிலான பண பரிமாற்றம் நடைப்பெறும் சூழ்நிலையில், இந்த டிரான்ஸ்பர் செயல்முறை எளிதாகவும், விரைவாகவும் நடைப்பெறும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






