இஸ்லாமிய, கிறிஸ்தவ வேட்பாளருக்கு பரப்புரை செய்ய மாட்டோம்... அர்ஜூன் சம்பத் அதிரடி முடிவு...
"அடிப்படை அறிவின்றி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விஜய் குரல் கொடுக்கிறார்"
பாஜக வேட்பாளர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவராக இருந்தால் அவர்களுக்காக பரப்புரை செய்ய மாட்டோம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிக்காக உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை. போதைப் பொருள் பற்றி குரல் கொடுக்காத விஜய், அடிப்படை அறிவின்றி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை முதலில் ஆதரித்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது எஸ்டிபிஐ கட்சியுடன் சேர்ந்துகொண்டு வரலாற்றுப் பிழை என கூறுகிறார். மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்கின்றனர். மாநில அரசுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லை என்ற அடிப்படை அறிவு இன்றி பேசுகிறார்கள்" என காட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையுடன் போதை பழக்கத்திலிருந்து தமிழ்நாடு விடுபட 'சே நோ டு ட்ரக்ஸ்' என்பதை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.
அப்போது, 40 தொகுதிகளிலும் பாஜகவின் வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம் என்று கூறினீர்கள், பாஜக வேட்பாளர் இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவராக இருந்தால் இந்து மக்கள் கட்சி பரப்புரை செய்யுமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
பாஜக வேட்பாளர்கள் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்து மக்கள் கட்சி பரப்புரை செய்யாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
What's Your Reaction?