AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானின் 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது-பிரிவதாக அறிவித்த மனைவி சாய்ரா பானு
இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்காகத் தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் இருவரின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்கர் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அதேபோல் அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைபடங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பங்கேற்கும் விருது வழங்கும் விழாக்களில் எப்போதாவது தலைகாட்டும் அவரது மனைவி சாய்ரா பானு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தனது இசையின் முதல் ரசிகை தனது மனைவி என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சமீப காலமாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது மகன் அமீனும் அடிக்கடி மேடைகளில் தோன்றி வருகிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வழக்கறிஞர் வந்தனா மற்றும் அசோசியேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ சாய்ரா பானு திருமணமாகி பல வருடங்கள் கழித்து தனது கணவரை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான உறவில் ஏற்பட்ட உணர்வுச்சிப்பூர்வ முறிவுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும், ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும், சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன. இந்த முரண்களைச் சரிசெய்து இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டதாக உணர்கிறோம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தங்கள் திருமணம் வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைக் தேடுவதாக தெரிவித்துள்ளார். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளிப்பதற்காகத் தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?