உண்ணாவிரதம் எப்படி எடுத்தால் உடலுக்கு நல்லது? எவ்ளோ கலோரி எடுக்கலாம்?
‘Intermittent Fasting’ என்பது தற்போது அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உண்ணாவிரதம் எடுப்பதால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் என்ன? அதனை எடுக்கும் முறைகள் குறித்து குமுதம் வாசகர்களுக்காக விளக்கியுள்ளார் மருத்துவர் த.ரவிக்குமார்.
                                    உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் என்பதே ‘விரதம்’. பல்வேறு மதத்தினரும் பலவித விரதங்களைக் கடைப்பிடிக்கின்றனர். மகாத்மா காந்தி, உண்ணாவிரதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், உண்ணாவிரதத்தில் உள்ள நன்மை & தீமைகளைப் பட்டியலிடுகிறார்கள்.
உண்ணாவிரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!
இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவும், செல்களுக்குள் மிகவும் திறமையாக குளுக்கோஸ் நுழைய அனுமதிக்கிறது, எடை இழப்புக்கு வழிவகுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைபயக்கும். ரத்தச்சர்க்கரை அளவைக் குறைத்து, ‘கிளைசெமிக்’ (Glycemic) கட்டுப்பாட்டை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.
மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கலாம். இது, எடை இழப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனுக்கு உதவும். தேவைக்கேற்ப மருந்துகள் அல்லது இன்சுலின் அளவைச் சரிசெய்ய, ரத்தச்சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும். உண்ணாவிரதமானது நீண்ட ஆயுளைத் தருவதாகக் கருதப்படுகிறது. இதய செயலிழப்பு விகிதங்களைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உண்ணாவிரதம் உதவுவதாக ‘அமெரிக்க இதய சங்கம்’ கூறியுள்ளது.
தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவர் களை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்காத வர்களோடு ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. மத காரணங்களுக்காக நோன்பு நோற்பவர்களிடம், நோன்பு பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், இஸ்லாமிய ரமலான் நோன்பு மற்றும் லெந்து தவக் கால நோன்பு உள்ளிட்ட நீண்ட நோன்புகளும் அடங்கும். சரியாக நோன்பு நோற்றால், பின்வரும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
- ஓய்வு நேரத்தில் இதயத் துடிப்பு குறையும்.
 - ரத்த அழுத்தம் குறையும்.
 - இதயத்தின் ‘பம்ப்’ செய்யும் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.
 - கெட்டக் கொழுப்பின் அளவு குறையும்.
 - இன்சுலின் அளவு குறையும்.
 
உண்ணாவிரதமானது நமக்கு வயதாவதைத் தள்ளிப்போடுகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் தாக்கத்தைக் குறைக்கிறது. எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் சிறந்த உடல் தோற்றத்தையும் பொலிவையும் தருகிறது.
உண்ணாவிரதத்தால் விளையும் ஆபத்துகள்!
- உண்ணாவிரதமானது அனைவருக்கும் ஏற்றதல்ல.
 - உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நேரங்களில் அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் தூண்டப்படுகிறது.
 - நீரிழிவு நோய் உள்ளவர்கள், மருந்துகள் மற்றும் இன்சுலின் எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு கடுமையாகக் குறையக்கூடும். இது, அவர்களின் உயிருக்குக்கூட ஆபத்தாக முடியலாம்.
 - சிலர், ‘உலர் விரதத்தை’ நாடுகிறார்கள். அதாவது, அவர்கள் உண்ணாவிரதத்தின்போது தண்ணீர் குடிக்கவோ அல்லது திட உணவுகளை சாப்பிடவோ மாட்டார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இது கடுமையான நீரிழப்பு, சோர்வு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, வெப்ப மயக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றைத் தூண்டும். தவிர, சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
 - கடுமையான கலோரி கட்டுப்பாடு பெரும்பாலும் ஆபத்தான குறைந்த உடல் எடைக்குத் தள்ளும். ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தூண்டும். இது, நீண்ட காலத்திற்கு உடலின் அனைத்து செயல்பாடுகளையும் மோசமாகப் பாதிக்கலாம்.
 
இடையிடையே உண்ணாவிரதம்!
இது, ‘Intermittent Fasting’ என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து சில மணிநேரங்கள் உண்ணாமல் இருக்கும் முறையாகும். உதாரணத்திற்கு, காலை 8 முதல் இரவு 8 வரை (அதாவது, 12 மணி நேரம்) உணவு உண்பார்கள். அதன்பின், இரவு 8 முதல் மறுநாள் காலை 8 வரை (12 மணி நேரம்) தண்ணீரைத் தவிர திட உணவுகள் எதையும் உண்ணாமல் இருப்பது, இந்த வகை உண்ணா நோன்பு ஆகும். இதனைப் பல வழிகளில் கடைப்பிடிக்கலாம். அதன் வகைகள் இதோ...
- 16:8 முறை: 16 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து 8 மணிநேரத்திற்குள் சாப்பிடுவது. (காலை 11 மணிக்கும் இரவு 8 மணிக்கும் உணவு உண்பது)
 - 5:2 முறை: 5 நாள்களுக்கு சாதாரணமாக 2,000 கலோரிகள் சாப்பிடுவதும், மற்ற 2 நாள்களில் கலோரிகளை 500 -600 ஆகக் கட்டுப்படுத்துவதும்.
 - ஒருநாள் விட்டு ஒருநாள்: ஒருநாள் 2,000 கலோரிகள் சாப்பிடுவது, மறுநாள் 500 கலோரிகள் சாப்பிடுவது.
 
எளிமையான உண்ணாவிரதம்!
தினமும் காலை 8 மணிக்கு காலை உணவை உண்டுவிட்டு, இரவு 8 மணிக்கு முன்பாக இரவு உணவை உண்டால், தினமும் 12 மணிநேரம் உண்ணா நோன்பிருந்த பலன் ஆயுள் முழுக்கக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
உண்ணாவிரத காலங்களில் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். தலைச்சுற்றல் அல்லது உடல் பலவீனம் மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தால், விரதத்தைக் கைவிட்டுவிட்டு மருத்துவரை அணுகுங்கள். அதுபோல, எந்த வகை விரதம் உங்களுக்கு முழுபலனைத் தரும் என்பதை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு மேற்கொள்வது மிகவும் நல்லது.
(கட்டுரையாளர்: டாக்டர் த.ரவிக்குமார் / சிநேகிதி இதழ் / 26.06.2025)
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            