'வாழும் ராஜேந்திர சோழனாக பிரதமர் மோடி திகழ்கிறார்’- நயினார் நாகேந்திரன்!
வருகிற ஜூலை 26 ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகைத் தர உள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பினை வழங்க பாஜகவினர் திட்டமிட்டு வரும் நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

வருகிற 26 ஆம் தேதி தூத்துக்குடியில் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்க தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பது குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தூத்துக்குடியில் 25,000 பேரைத் திரட்டி பிரதமருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தூத்துக்குடி வருகை:
நயினார் நாகேந்திரன் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகை தந்து, புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் தமிழகத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைப்பது தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு பதில். ’வாழும் ராஜேந்திர சோழனாக பிரதமர் மோடி இருந்து வருகிறார்’ அவரால் தமிழகத்திற்கு நன்மை மட்டுமே கிடைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் பேரைத் திரட்டி பிரதமரை வரவேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
அன்வர்ராஜா திமுகவில் இணைந்தது குறித்து விமர்சனம்:
அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது அதிமுகவில் இருந்த அன்வர் ராஜாவுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைந்த பின்னர் திமுக பதட்டத்திலேயே இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய நயினார் நாகேந்திரன், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கரூர், தருமபுரி போன்ற இடங்களில் 10 கொலைகள் நடந்துள்ளன. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஒரு 'சேடிஸ்ட்' போன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். சிவகங்கை அஜித்குமார் காவல் மரணத்திற்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தான் மூல காரணம். தேர்தல் பிரச்சாரம் செய்து திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தேவையில்லை. டேவிட்சன் தேவாசீர்வாதத்தாலேயே திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், “சென்னை மாநில கல்லூரி வாசலில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் திமுகவினர் கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை விற்கச் சென்றிருப்பார்கள்” என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக திமுகவின் பிரச்சாரத்தை விமர்சித்தார்.
What's Your Reaction?






