100 முறை மோடி வந்தாலும் ஒண்ணும் நடக்காது... அவர் தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்! வைகோ அட்வைஸ்
மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40-ல் வென்று இந்தியா கூட்டணி முத்திரை பதிக்கும் - வைகோ நம்பிக்கை..!
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்தியா கூட்டணியை வெல்ல முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் (ஏப்ரல் 17) நிறைவடைகிறது. இதையடுத்து கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜகுமாரை ஆதரித்து, காந்திபுரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர், தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் சனாதன சக்திகளைச் சாய்த்து, இந்துத்வா கொள்கைகளை உடைக்கும் வேலையைப் பார்க்கும் தேர்தல் என்றார். தமிழ்நாடு முழுவதும் திமுக ஆதரவு அலை வீசி வருவதாகக் கூறிய அவர், இந்தியா கூட்டணி நாடெங்கிலும் எழுச்சி பெற்று வருகிறது என்றும், அதைத் தேர்தலின் வெற்றி நிரூபிக்கும் என்றும் பேசினார்.
தேர்தல் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு 9 முறை பிரதமர் மோடி வந்திருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்தியா கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது என்று திட்டவட்டமாகப் பேசினார். நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, திராவிடக் கட்சிகளை அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்றபடியெல்லாம் பேசுகிறார் என்று சொன்ன வைகோ, இது அவர் பதவிக்கு அழகல்ல என்றார். மேலும், முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்றோர் கடைபிடித்த தன்னடகத்தை மோடி கடைபிடிக்கத் தவறிவிட்டார் என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மோடி உட்பட யார் நூறு முறை வந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என்று சவால் விட்டார். மேலும், இந்தத் தேர்தலில் 40 க்கு 40-ல் வென்று இந்தியா கூட்டணி முத்திரை பதிக்கும் என்றும் பேசினார்.
What's Your Reaction?