ஆடி அமாவாசை: படையல் முதல் தர்ப்பணம் வரை.. தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
வருகிற ஆடி அமாவாசையன்று (ஜூலை 24 ஆம் தேதி) முன்னோர்களுக்கு படையல் வைப்பது வழக்கம். அன்றையத் தினத்தில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை இப்பகுதியில் காண்போம்.

ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது ஆடி, புரட்டாசி, தை அமாவாசை தான்.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சூரியன் நகரக்கூடிய ஆடி முதல் மார்கழி வரையான காலகட்டத்தை 'தட்சிணாயனம்' எனக் கூறுவர். மழைக்காலத் தொடக்கமாக வரும் இக்காலக்கட்டம், பொதுவாகவே இறை மற்றும் நீத்தார் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அதனால்தான், 'ஆடி அமாவாசை' நாளும் முக்கியத்துவம் பெறுகிறது.
அமா- ஒன்றாக அருகில் இருத்தி, வாஸ் - வசிப்பது. அன்றைய தினம் நாம் அளிக்கும் உபசாரங்களை முன்னோர் எதிர்நோக்கி, நம் வீட்டின் முன்பாகக் காத்திருந்து, அவற்றை ஏற்று, ஆசி வழங்குவர் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மற்றொன்று, சூரிய - சந்திரர்கள் நேர்கோட்டில் இணைந்து, மா-மதி, மறைந்திருப்பது என்பதாகும்.
ஆடி அமாவாசை ஏன் முக்கியம்?
நமக்கு ஏற்பட்டுள்ள 'பித்ரு தோஷத்தை' போக்கிக்கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்தான் 'ஆடி அமாவாசை'. இந்நாளில் முன்னோரை வணங்குவதால், திருமணம், குழந்தைப் பேறு உள்பட நம்முடைய வீட்டில் தாமதப்படும் சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும், முன்னோரின் ஆசி பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.
நம்மால் இயன்றளவு சிறந்த முறையில் சிரத்தையோடு முன்னோரை வழிபட்டால், நீண்ட ஆயுள், நல்ல வாரிசுகள், புகழ், செல் வம், நிறைந்த தானியங்கள் உள்பட பதினாறு பேறுகளும் பெற்று, வாழ்வாங்கு வாழலாம் என்பது ஜாபாலி மகரிஷியின் வாக்கு.
'ஓடிப்போனவனுக்கு ஆடி அமாவாசை, தடுமாறிப்போனவனுக்குத் தை அமாவாசை, மறந்துபோனவனுக்கு மஹாளய அமாவாசை' என்றொரு சொல்வழக்கும் உள்ளது. அதன்படி, மறக்கவியலாத மற்றும் மறந்துபோன நம் முன்னோரை வணங்கி, அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு, எள்ளும் நீரும் தந்து பூஜை செய்து. முக்கியமாக வறியோருக்கு அன்னதானமளித்து, எடுத்த ஜென்மம் கடைத்தேற முற்படுவது அவசியம்.
பித்ருலோகத்தில் தங்கியிருக்கும் நம் மூதாதையர் மறுபிறவி எடுக்கையில், அச்சமயம் நாம் அளிக்கும் பொருள் அவர்களுக்குப் பிரியமான உணவின் வடிவமைப்புக்குப் பித்ரு தேவதைகளால் மாற்றப்படும். பிறகு, முறையானவர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பது காஞ்சி பரமாசாரியாரின் விளக்கமாகும்.
பித்ரு உலகில் உலவும் நம் மூதாதையர்கள், தர்மராஜனின் அனுமதியுடன் ஆடி அமாவாசையன்று பூமிக்குத் திரும்பி வருவதாகவும், பின்னர், புரட்டாசி மாத 'மஹாளய அமாவாசை' வரை நம்முடன் மானசீகமாக இருப்பதாகவும் சொல்வர். 'உத்தராயணம்' காலகட்டத்தில் வரக்கூடிய 'தை அமாவாசை' நாளில் அவர்கள் நம்மை ஆசிர்வதித்துவிட்டு மீண்டும் பித்ரு உலகிற்குத் செல்வதாக ஐதிகம்.
எனவே ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய 3 நாள்களில் முறையாகத் திதிகொடுத்து, முன்னோரை மகிழ்வித்தால், 21 தலைமுறைகளாகத் தொடரும் சகல தோஷங்களும் நீங்கி, நன்மை பயக்கும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை
ஒருவன் தம் தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு மட்டும் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை' என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். எனவே ’பித்ரு தர்ப்பணம்' என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாய் தந்தையர் இறந்த தேதி. திதி தெரியாதவர்கள், ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையன்று திதி கொடுக்கவேண்டும். இதற்கு வட்டாரப் பேச்சுவழக்கில், 'முன்னோருக்கு மூன்று கை தண்ணீர்' என்ற சொலவடையும் உண்டு.
ஆடி அமாவாசை படையல்: தவிர்க்கவேண்டியவை என்ன?
நமக்கு ஏற்பட்டுள்ள 'பித்ரு தோஷத்தை' போக்கிக்கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்தான் 'ஆடி அமாவாசை'. இந்நாளில் முன்னோரை வணங்குவதால், திருமணம், குழந்தைப் பேறு உள்பட நம்முடைய வீட்டில் தாமதப்படும் சுப காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும், முன்னோரின் ஆசி பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதிகம்.
பித்ருலோகத்தில் மூலிகையாகப் புடலங்காய் இருப்பதாக நீதி நூல்கள் கூறுகின்றன. அதன் நிழலில்தான் நம் முன்னோர் இளைப்பாறுகிறார்களாம். எனவே, 'ஆடி அமாவாசை'யன்று புடலங்காய், வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றைப் படையலில் சேர்ப்பதால், வாழையடி வாழையாக நம் குலம் தழைக்க அவர்கள் ஆசி தருவார்களாம். அதேபோல், பசுந்தயிரும் அவர்களுக்கு மிகவும் பிடித்த விருப்பமான உணவுப் பொருள் என்பதால், அதையும் சேர்ப்பது நல்லது.
பொதுவாகவே, இச்சையைத் தூண்டும் காய்கறிகளான, வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை அன்றைய தினம் தவிர்க்கவேண்டும். பின்னர், காகத்திற்கு அந்தப் படையலை வைத்து, காகம் உணவெடுத்த பிறகே நாம் உண்ணவேண்டும்.
காரணம், நம் முன்னோர்தான் காகம் வடிவில் பூமிக்கு வருகின்றனர் என்பது ஐதிகம். அதுமட்டுமல்ல; காகமானது எமனின் தூதுவன் என்றும். எமலோகத்தின் வாயிலில் காகம் காவல் காக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. காகத்துக்குச் சாதம் வைத்து, உணவை அது கொத்தி விழுங்கியது என்றால், எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதியடைந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
மூதாதையர்கள் மறுபடியும் பிதுர்லோகம் திரும்ப விருப்பதால், அவர்களின் பயணம் சீராக அமைய, அரிசி, பாசிப்பருப்பு, நெய், வாழைக்காய், குடை, காலணி ஆகியவற்றை முன்னோரின் பிரதிநிதியாகப் பங்குபெறும் அந்தணர்களுக்கு அளிக்க வேண்டும்.
காசி, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமம், கயா, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பவானி கூடுதுறை, கொடுமுடி, பேரூர், திருவையாறு. ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு 'திலதைப்பதி எனும் திலதர்ப்பணபுரி ஆகியவை ஆடி அமாவாசை'யன்று முன்னோர் வழிபாடு செய்ய மிகவும் சிறந்த தலங்களாகும்.
'ஆடி அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது. பித்ரு பூஜை செய்து முடிக்கும் வரை, வீட்டில் அன்றாடம் மேற்கொள்ளும் பூஜைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
(கட்டுரையாளர்: மீனாட்சி கண்ணன்/ குமுதம் சிநேகிதி / 24.07.2025)
What's Your Reaction?






