போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய விசாரணை கைதியான சிறுவன் தப்பித்து ஓடியுள்ளான்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அசோக் நகர் போலீசார் வழிப்பறி வழக்கில் அந்த 16 வயது சிறுவனை கைது செய்து கெல்லீஸ் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த அச்சிறுவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்காக அனுமதி கேட்டு அச்சிறுவனுடைய பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கூர்நோக்கு இல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த 13ம் தேதி கூர் நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவனை அதிகாரிகள் அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஏ.எம்.கே என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று மையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளான். இதனால் பதறிப்போன போதை மறுவாழ்வு மையத்தின் நிர்வாகி யுவராஜ் இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 16 வயதுடைய விசாரணைக் கைதியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?