மக்களிடம் முதலீடு பெற்று ரூ.3.89 கோடி மோசடி: ஸ்வர்ணதாரா குழும தலைவர், இயக்குநர்கள் 7 பேர் கைது!

போலீசார் விசாரிப்பது தெரியவந்ததும், ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் வெங்கடரங்க குப்தா, நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவானார்கள். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையிலான தனிப்படையினர் இவர்களை தேடிவந்தனர்.

May 30, 2024 - 10:25
மக்களிடம் முதலீடு பெற்று ரூ.3.89 கோடி மோசடி: ஸ்வர்ணதாரா குழும தலைவர், இயக்குநர்கள் 7 பேர் கைது!

சென்னை: பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்த ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னையைச் சேர்ந்தவர் ராஜகோபால். கடந்த 2015ம் ஆண்டு இவரை அணுகிய எஸ்வர்ணதாரா குழுமத்தினர், ''எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து முதலீடு பெற ரிசர்வ் வங்கியிடம் இருந்து உரிய அனுமதி பெற்றுள்ளது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100% லாபத்தொகையை கொடுக்கிறோம். 3 ஆண்டுகள் முடிந்தபிறகு முதலீடு செய்த முழுத்தொகையை கொடுத்து விடுகிறோம்'' என்று கூறியுள்ளது. 

இதனை நம்பிய ராஜகோபால், கடந்த 2015ம் ஆண்டு ரூ. 3 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர்.  அதன்பிறகு ராஜகோபால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 61 பேர் இந்த நிறுவனத்தில் ரூ.2.40 கோடி வரை முதலீடு செய்துள்ளார்கள். அதே போன்று சுப்பையா என்பவரும் அவருடன் சேர்த்து 25 நபர்களும்  நிறுவனத்தில் ரூ.1.49 கோடி வரை பணம் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ஸ்வர்ணதாரா நிறுவனத்தினர் ஏற்கெனவே கூறியபடி முதலீட்டு பணத்திற்கு லாபத்தை தராமலும், முதலீட்டு தொகையை திருப்பி தராமலும் ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து ராஜகோபால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்கள். 

அப்போது மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பது தெரியவந்ததும், ஸ்வர்ணதாரா குழுமத்தின் தலைவர் வெங்கடரங்க குப்தா, நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவானார்கள். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில்  காவல் ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையிலான தனிப்படையினர் இவர்களை தேடிவந்தனர். 

இந்நிலையில், பொதுமக்களிடம் மோசடி செய்த ஸ்வர்ணதாரா நிறுவனத்தின் தலைவர் வெங்கடரங்க குப்தா, நிறுவனத்தின் இயக்குநர்கள் ஹரிஹரன், விஜயஸ்ரீ குப்தா, கவிதா சக்தி, பிரதிஷாகுப்தா, ஜெயசந்தோஷ், ஜெயவிக்னேஷ் ஆகிய 7 பேரை சென்னை கொரட்டூர் மற்றும் நொளம்பூர் ஆகிய பகுதிகளில் வைத்து போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைதான 7 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார்  சோதனை நடத்தினர். அப்போது ரொக்க பணம் ரூ.4.50 லட்சம், 44 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், 2 சொகுசு கார்கள், 2 லேப்டாப், 14 செல்போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow