"முதலமைச்சரும் திருமாவளவனும் இணைந்து நடத்தும் டிராமா" - எல் முருகன்
விசிக சார்பில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவனுன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து நடத்தும் டிராமா என விமர்சித்துள்ளார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட நாளான இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் அலுவலகத்தில் மரங்களை நட்டார். மேலும், தூய்மையை கடைபிடிப்பேன் என்று தூய்மை பாரத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் தூர்தர்ஷன் அலுவலகத்தில் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ”கடந்த 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை சேவை வாரங்களாக கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறோம். நரேந்திர மோடி பிறந்த நாளில் ரத்த தான முகாம், மருத்துவ முகாம் எல்லாம் நடத்தி வருகிறோம்.”
”2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் சுகாதாரத்தை வலியுறுத்தினார். பெண் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள பழைய fileகளை சுத்தப்படுத்தி அரசுக்கு மிகப்பெரிய வருமானம் கொடுத்தது. இதன் ஒரு பகுதியாக தாயின் பெயரில் ஒரு மரம் என்று பிரதமர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நாமும் பாரத தாயின் பெயரில் மரத்தை நட்டுள்ளோம்.”
”மக்கள் அனைவரும் சுகாதார இயக்ககத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், சுத்தமான காற்று வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நம் நாடு மிக வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. 2047ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நகர்ந்து வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, ”தமிழக முதலமைச்சர் பிரதமரை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். சந்திப்பின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு துறைக்கும் ஏற்றமாதிரியான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து சொல்வார்கள்.
மெட்ரோ பணிகளுக்கான நிதியை பொருத்தவரை ஏற்கனவே நிதியமைச்சர் பல முறை தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசாங்கம் பணிகளை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சொல்லி உள்ளனர்” என்றார்.
மேலும், ”உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க உள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, “உதயநிதி துணை முதலமைச்சராக வருவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. தமிழ்நாட்டை மது இல்லாத மாநிலமாக மாற்றப்போவதில்லை. அவர்கள் வந்த பிறகுதான், தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள். தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சர் ஆனால் அவர்கள் குடும்பத்தில் வாரிசுக்கு மீண்டும் பதவிஉயர்வு கிடைக்கும்.”
”காவல்துறை என்கவுண்டர் செய்வது குறித்து குற்றவாளிகளை கைது செய்தால் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், தீபாவளி துப்பாக்கி போல் சுடுவது அல்ல சட்டம் ஒழுங்கு. சட்டத்தின் மாண்பு எதற்கு உள்ளது. துப்பாக்கியால் சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாது, என தெரிவித்தார்.
மேலும், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டும் தான் வெளியில் வந்துள்ளார், நீதிமன்றம் நிரபராதி என்று சொல்லவில்லை அடுத்த கட்டமாக வழக்கு நடைபெறும் போது தான் முடிவு தெரிய வரும். ஏற்கனவே குஜராத், பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளோம். வட இந்தியாவில் 3 மாநிலங்களில் மது விலக்கு உள்ளது. தமிழ்நாட்டில் மது விலக்கு வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.
அதை தமிழக அரசு செய்யமாட்டார்கள் ஏனென்றால், பல இடங்களில் மது விற்பனை செய்வதே திமுகவினர் தான். பீகார், குஜராத் போன்ற மாநிலங்களே மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு ஏன் அதை செய்ய முடியாது. விசிக சார்பில் மதுவிலக்கு மாநாடு என்பது ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நடத்தும் டிராமா.
அமெரிக்காவுக்கு தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க சென்றார். அதில் பெருமளவு முதலீடு ஈர்க்க முடியவில்லை அதை மக்களிடமிருந்து திசைதிருப்ப இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து அவர் திரும்ப இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த டிராமா தொடங்கப்பட்டது” என எல்.முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
What's Your Reaction?