சோசியல் மீடியாவில் ஆபாசமாக பேசிய நபர்: சட்டையை பிடித்து அடித்த துணை நடிகை
சோசியல் மீடியாவில் தன்னிடம் ஆபாசமாக பேசிய நபரை நேரில் சென்று சட்டையை பிடித்து அடித்த துணை நடிகையால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி சீரியல் நடிகையும், இந்தியன் இரண்டாம் பாகம் மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் ஞானலிலா என்ற ஸ்ரீ அஸ்வினி தங்கராஜ். இவர் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேட்ட வார்த்தை கெட்ட வார்த்தை என்ற குறும்படம் இயக்கி வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த குறும்படத்திற்கும் கலவையான விமர்சனமும் வந்தன. பொது இடத்தில் குடிப்பது தொடர்பாக வீடியோ ஒன்றை துணை நடிகை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ஆபாசமாக பேசிய நபர் தொடர்பாக சமூக வலைதளத்தில் புகார் அளித்திருந்தார்.
அது தொடர்பாக காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் இன்ஸ்டா ஐடியில் ஆபாசமாக பேசிய நபருடன் நட்பாக பழகுவது போல மெசேஜ் செய்து, அவர் அசோக் நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்ப்பது தொடர்பாக அவரது ஐடி பக்கத்தில் வீடியோ வெளியிட்டதை அறிந்த நடிகை மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் நேரடியாக அந்த உணவகத்திற்குச் சென்று கையும் களவுமாக சம்பந்தப்பட்ட நபரை பிடித்து தட்டி கேட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் மனைவி குடும்பத்துடன் வாழும் நீ இதுபோன்று ஒரு பெண்ணை ஆபாசமாக பேசலாமா என உணவகத்தில் இருந்து சட்டையை பிடித்து நடுரோட்டில் இழுத்து சரமாரியாக கேள்வி கேட்டு தாக்கி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்து அந்த நபரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இன்ஸ்டா பக்கத்தில் தன்னிடம் ஆபாசமாக குறுஞ்செய்தி வெளியிட்ட நபரை நடிகை தேடிச்சென்று கண்டித்த சம்பவத்தையும் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.அதுவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. துணை நடிகை தாக்கியதில் அந்த நபர் காயமடைந்ததாக தெரிகிறது. அந்த நபர் இதுவரை புகார் அளிக்காததால், தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
What's Your Reaction?

