தோனியின் சாதனையை நிகர் செய்தார் ரிஷப் பந்த்
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்கிற தோனியின் சாதனையை இன்றைக்கு ரிஷப் பந்த் நிகர் செய்திருக்கிறார்.
இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான டெஸ்ட் கிரிகெட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். கார் விபத்தில் சிக்கி மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு தனது பழைய ஃபார்முக்குத் திரும்பியுள்ளார் ரிஷப் பந்த்.
விபத்திலிருந்து மீண்டெழுந்து வந்த பிறகு அவர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுதான். அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போனவர் ரிஷப் பந்த். விபத்துக்குப் பிறகும் அவரிடம் அந்த அதிரடி வெளிப்படுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். சிங்கத்தின் கால்கள் சிதைபட்டாலும் அதன் சீற்றம் குறைவதில்லை என்று சொல்வதைப் போல காயத்திலிருந்து மன வலிமையோடு மீண்டு வந்தவர் அதிரடியாக விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த், இரண்டாவது இன்னிங்ஸில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 109 ரன்களைக் குவித்தார்.
இன்றைய போட்டியில் அவர் விளாசிய சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிகெட்டில் அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்கிற எம்.எஸ்.தோனியின் சாதனையை ரிஷப் பந்த் நிகர் செய்துள்ளார்.
தோனி டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 6 சதங்கள் விளாசி அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்கிற சாதனையை இதுநாள் வரையிலும் தக்க வைத்திருந்தார். இன்றைக்கு அடித்த சதத்தின் மூலம் ரிஷப் பந்தும் தனது 6 வது சதத்தைப் பதிவு செய்து அச்சாதனையைத் தொட்டிருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக 3 சதங்கள் விளாசி விருத்தமன் சாஹா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
What's Your Reaction?