எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று - தணிக்கை வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் கெடு
எமர்ஜென்சி திரைப்படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்காத தணிக்கை வாரியத்தை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத நிலையில் இது குறித்து விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் பீபி கொலபாவாலா, ஃபிர்டோஷ் பூனிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய தணிக்கை வாரியத்தைச் சாடியிருக்கிறது. இந்திய அளவில் பெரிதும் அறியப்படும் நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள இவர் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகினார். தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்கிற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். சிறந்த நடிகை எனப் பெயரெடுத்த இவர் இதுவரையிலும் 4 முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.
இவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்வின் குறிப்பிட்ட காலகட்டத்தை அடிப்படையாக வைத்து எமர்ஜென்சி என்கிற திரைப்படத்தினை இயக்கி, அதில் இந்திராகாந்தியாக நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் அப்படத்துக்கு அவர் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தினை தணிக்கை செய்யவிடாமல் பலர் மிரட்டுவதாக கங்கனா ரணாவத் சமீபத்தில் கூறியிருந்தார்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளது. அவ்வழக்கில் படத்தின் தணிக்கை முடிவடைந்த நிலையில் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. சீக்கியர்கள் குறித்து இத்திரைப்படத்தில் தவறாக காண்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறி இத்திரைப்படத்தினை வெளியடக்கூடாதென சிரோமனி அகாலிதளம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சர்ச்சை குறித்துப் பேசிய கங்கனா, “இத்திரைப்படத்தில் இந்திரா காந்தியைக் கொலை செய்ததையோ, ஜர்னல் சிங் பிந்தரன் வாலாவைப் பற்றியோ காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாது என்று சொல்கிறார்கள். இவைகளைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை” என கங்கனா கூறியிருந்தார். இத்திரைப்படத்துக்குப் பின் உள்ள சர்ச்சை காரணமாக தணிக்கை செய்யப்பட்டும் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது.
இது குறித்து விசாரித்த நீதிபதிகள் மத்திய தணிக்கைத் துறையினரிடம் ‘நீங்கள் எதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும். படம் ரிலீஸ் ஆகாது என்று கூறுவதற்கேனும் உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களது தைரியத்தையும், வெளிப்படைத்தன்மையையும் பாராட்ட முடியும். எந்த முடிவுக்குள்ளும் செல்லாமல் மதில்மேல் பூனை மாதிரி இருக்கக் கூடாது. ஏற்கனவே செப்.18ம் தேதிக்குள் தணிக்கை செய்ய ஆணையிடப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் உயர்மட்டத் தணிக்கைக் குழு பரிசோதிப்பதாகக் கூறுவது பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் கைமாற்றும் செயலாக இருக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.
இந்தப் படம் ரிலீஸ் ஆவதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுமென தணிக்கை வாரியம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. மேலும், அதனால்தான் சான்றிதழ் அளிக்கவில்லை என்று கூறவும் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் நாம் படைப்பு சுதந்திரம் பறிபோய் விடும். படத்தில் பார்ப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் அளவுக்கு நம் மக்கள் முட்டாள்கள் இல்லை. இரண்டு வார கால அவகாசமெல்லாம் வழங்க முடியாது. செப்.25ம் தேதிக்குள் இப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்’ என நீதிபதிகள் கெடு விதித்துள்ளனர்.
What's Your Reaction?