திமுக எங்கெல்லாம் நேரடிப் போட்டி? காங். மதிமுகவுக்கு இறுதியான தொகுதிப் பங்கீடு...
காங்கிரஸுக்கு 11 தொகுதி, மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கி அறிவிப்பு வெளியீடு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் மதிமுகவும் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடப் போகின்றன என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில், ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி) மற்றும் சிதம்பரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி ராமநாதபுரத்திலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல்லிலும் போட்டியிடுகின்றன.
இவை முன்னரே ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் மதிமுக உடனான தொகுதிப் பங்கீடு மட்டும் இழுபறியில் இருந்தது. இந்நிலையில், தற்போது திமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய தொகுதிகள் எந்தெந்த நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, திமுகவானது சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), ஸ்ரீபெரும்புதூர், பெரம்பலூர், தேனி, ஈரோடு, ஆரணி ஆகிய தொகுதிகளில் நேரடியாகக் களமிறங்குகிறது.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, கரூர், திருவள்ளூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கடலூர், திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?