"தமிழ், உலகின் பழமையான, அழகான மொழி" - பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் புகழாரம்

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Apr 8, 2024 - 17:01
"தமிழ், உலகின் பழமையான, அழகான மொழி" - பிரசாரத்தில் ராஜ்நாத் சிங் புகழாரம்

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அதன்படி, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்கு சேகரிப்பதற்காக தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதன்படி, திங்கட்கிழமை பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நாமக்கல்லுக்கு வருகை தந்த ராஜ்நாத் சிங், நாமக்கல் தொகுதியில் பேரணி நடத்தினார்.

 

இந்த பேரணி, நாமக்கல் -  சேலம் சாலையில் உள்ள நான்கு தியேட்டர் சந்திப்பில் தொடங்கி, பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து கை அசைத்த அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

பின்னர்,  பாஜக மாநில துணை தலைவரும், பாஜக வேட்பாளருமான கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து, அவர் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, பேரணியாக சென்றனர்.

 

 

இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

அதில் பேசிய அவர், உலகின் பழமையான மற்றும் அழகான மொழிகளில் ஒன்று தமிழ் என்றும், திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டில் இருப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார். மேலும், ஐ.நா.விலும் தமிழில் பேசி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டிய அவர், பிரதமர் மோடியால், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

மேலும், 75 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்துள்ளதோடு, நிறைய மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங்க குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow