காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...ஏக்கர் கணக்குல பொய் சொல்லக் கூடாது" - கிண்டல் செய்த முதலமைச்சர்...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்கும் தேர்தல் அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் விழுப்புரத்தில் திமுக சார்பில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "மக்களவைத் தேர்தல் 2-வது விடுதலைப் போராட்டம். காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டை படுகுழியில் தள்ளிய பாஜகவிடம் இருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை. 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல பாஜக தீட்டியுள்ள திட்டத்திற்கு தடை போடும் தேர்தல் அறிக்கை" என பெருமிதம் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாங்கள் வலியுறுத்தியதால் தான் செயல்படுத்தப்பட்டது என எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் சொல்கிறார். ஒரு மனிதன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரூ.1,000 உரிமைத் தொகையை ஸ்டாலின் அண்ணன் கொடுத்தார் என பெண்கள் கூறுவார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சீரழித்த பாவத்தை செய்தவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிதான் தமிழ்நாட்டின் இருண்ட காலம். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை மட்டுமல்ல அதிமுகவையும் அடகு வைத்துவிட்டார். அவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் நம்ப தயாராக இல்லை. அதிமுக ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தை சீர்திருத்த பல அவசர நடவடிக்கைகளை எடுத்தோம். இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல உலக நாடுகளே தமிழ்நாட்டை கவனிக்கும் வகையில் சாதனைகளை செய்து வருகிறோம். திராவிட மாடல் அரசின் காலை உணவுத் திட்டம் கனடா வரை சென்றுள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை பாஜகவால் கைப்பற்ற முடியாது. திமுக இருக்கும் வரை அவர்கள் எண்ணம் பலிக்காது. தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது திமுக ஆட்சி தான். இந்த திராவிட மாடல் ஆட்சி டெல்லியில் இந்தியா கூட்டணி மூலம் எதிரொலிக்க வேண்டும். உங்கள் வாக்கு இந்தியாவைக் காக்கும் வாக்காக அமையட்டும் என்று கூறினார்.
What's Your Reaction?