திமுக ஆட்சிக்கு வந்தாலே பவர்கட்.. கூட்டணி மூலம் குளிர் காயும் ஸ்டாலின்.. லெப்ட் & ரைட் வாங்கிய EPS
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு வந்துவிடும். திமுகவும், மின்சாரமும் மிக நெருக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் மத்தியில், வீட்டு மக்களுக்காக வாழ்பவர்கள், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு குறித்து முதலமைச்சர் ஒரு அறிக்கை கூட விடவில்லை. ஏனென்றால் இந்தியா கூட்டணி என்ற பெயரில் அவர் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் பிரசாரத்தின்போது ஒரு இடத்திலாவது விவசாயிகளை பற்றி பேசினார்களா? ஆனால், மகளிர் உரிமைத் தொகை குறித்து தம்பட்டம் அடிக்கிறார்கள். இவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது. இது அவர்கள் வீட்டு பணம் இல்லை. இந்த திட்டம் கூட அதிமுக கொடுத்த அழுத்தத்தின் பேரில் தான் செயல்படுத்தப்பட்டது.
இலவச பேருந்து திட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், விவசாயிகள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்துவது, ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் என்னவானது?
திமுக அரசு மின்கட்டணத்தை 52% உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு வந்துவிடும். மின்சாரத்திற்கும் திமுகவுக்கும் மிக நெருக்கம் உண்டு" என தெரிவித்தார்.
What's Your Reaction?