தனிமரமான வேலுமணி? தரம் தாழ்ந்த தாக்குதல்கள்... முரட்டு மோதலில் கோவை ர.ர.க்கள்!

கோவை அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி. வேலுமணி ஆதரவு அணிகளுக்கு இடையேயான கருத்து மோதல் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Sep 17, 2026 - 20:00
தனிமரமான வேலுமணி? தரம் தாழ்ந்த தாக்குதல்கள்... முரட்டு மோதலில் கோவை ர.ர.க்கள்!

‘எம்.எல்.ஏ. பதவியை மறுபடியும் கனவுலகூட நினைச்சு பார்த்துடாதண்ணோவ்' என எடப்பாடி வேலுமணிக்கு எதிராக டீம் பட்டாசு கொளுத்த, 'பதினோறு தோல்வி பழனிசாமிக்கு பன்னெண்டாம் தோல்வியும் பார்சல்' என வேலுமணி டீமும் எதிர் வேட்டு வெடிக்க, அந்தலி சிந்தலியாகி கிடக்கிறது கோவை அ.தி.மு.க. ஐ.டி.விங் ஏரியா.

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிர் துருவமாக மாறி நிற்கிறார் வேலுமணி. தலைமை கொடுத்த 'துணைப் பொதுச்செயலாளர்' பதவியையும் ஏற்க மறுத்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக மட்டும் கட்சிக்குள் சடுகுடு ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் வேலுமணியின் கண்ணசைவுக்கு ஆடிய கட்சியினர், இப்போது அவரையே உரசிப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதை சாமர்த்திய அரசியல் மூலமாக சரிசெய்து, மீண்டும் கழகத்தில் முன்னிலை பெறலாம் என வேலுமணி நம்பியிருந்தார். ஆனால், விதியோ வேறு விளையாட்டை துவங்கியுள்ளது. அதாவது தனது கோட்டையான கோவை மாவட்டத்திலேயே மிக மோசமான சரிவை அவர் சந்திக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் வேலுமணிக்கு எதிரான தரப்பும், அவருக்கு ஆதரவான தரப்பும் தற்போது சமூக வலைதளங்களில் கண்ணியமில்லாத தாக்குதலில் இறங்கி அ.தி.மு.க.வின் மானத்தையே கப்பலேற்றிவருகின்றன.

இதுகுறித்து அதி.மு.க. நடுநிலை. நிர்வாகிகளிடம் கேடது, “அம்மா காலத்திலேயே எங்கள் கழகத்தின் மிக முக்கியமான அதிகார மையமாக வேலுமணி உருவெடுத்தார். பொள்ளாச்சி ஜெயராமன், செங்கோட்டையன், செ.ம.வேலுசாமி GT GT சூப்பர் சீனியர்களை எல்லாம் தாண்டி குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்டார். எடப்பாடி ஆட்சியிலும் அவருக்கு இணையான அதிகாரத்தோடுதான் கட்சியில் இருந்தார்.

ஆனால், எடப்பாடிக்கு எதிராக எப்போது செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினாரோ, அப்போதே வேலுமணியும் தலைமைக்கு எதிராக திரும்பினார். செங்ஸை போல வெளியேறாமல் கட்சிக்குள் இருந்தே ஈகோ யுத்தம் நடத்தினார். தாமரையோடு கூட்டணியை எடப்பாடி முறித்திருந்தபோது, தன் வீட்டு திருமணத்தை பா.ஜ.க. இல்ல திருமணம்போல வேலுமணி நடத்தியதெல்லாம் எடப்பாடிக்கு பேரதிர்ச்சி.  அந்த நிகழ்வில் அண்ணாமலை, செங்ஸ் என எடப்பாடியின் எதிரிகளுக்கு ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போதைய மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனே வந்து நின்றதும் கோவை விமான நிலையத்தில் வைத்து மீண்டும் தாமரை -இலை கூட்டணி உருவானதும் வேலுமணிக்கு பாஜகவிலிருந்த செல்வாக்கை உணர்த்தியது. இதன்மூலம் தனது பொதுச்செயலாளர் பதவியை குறிவைத்துதான் வேலுமணி காய்நகர்த்துகிறாரோ? ஆட்சியைப் பிடித்தால் டெல்லி செல்வாக்கில் முதலமைச்சர் அல்லது துணை முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிடுவாரோ என்ற சந்தேகம் எடப்பாடிக்கு ஏற்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் எல்லாவற்றையும் தலைகீழாக்கின.

ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை, அது வேலுமணிக்கும் எடப்பாடிக்குமான ஈகோ யுத்தம் தன் கட்டுப்பாடையும் மீறி விஜய் ஆட்சிக்கு வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான டீம் ஆதரவு கொடுத்தபோது, அவர்களை கழக பொறுப்புகளில் இருந்து இறக்கிய எடப்பாடி, அடுத்து அவர்களின் எம்.எல்.ஏ. பதவிகள் மீதும் கை வைக்க தயாரானார்.

அப்போதுதான் 'இது நம் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும்' என அதிர்ந்த அதிருப்தியாளர்கள் எடப்பாடியோடு இணக்கமாவதுபோல் வந்தனர். ஆனால், உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டவேயில்லை. இன்று கோவையில் ஒரு மாவட்டச் செயலாளராககூட  இல்லை. தலைமை போட்ட கட்டத்தை தாண்டிப் போனவர்களில் சி.வி.சண்முகம், அன்பழகன் போன்றோரைவிட வேலுமணி மீதுதான் அதிகப்படியான அதிருப்தி கட்சிக்குள் எழுந்தது.

காரணம், எடப்பாடிக்கு அடுத்து இவர்மீதுதான் மரியாதையையும், பயத்தையும் கழகத்தினர் வைத்திருந்தனர். ஆனால், இன்று கோவை மாவட்ட கழகமே வேலுமணிக்கு எதிராக நிற்கிறது. அவரால் பதவிக்கு கொண்டுவரப்பட்ட அம்மன் அர்ஜூனன், அருண்குமார் ஆகிய மா.செ.க்கள் கூட அவரோடு இல்லை. மாஜி எம்.எல்.ஏக்கள் செல்வராஜ், சின்ராஜ், ஜெயராம். கந்தசாமி என அத்தனை பேரும் வேலுமணிக்கு பதிலாக எடப்பாடி நியமித்த மாஜி அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு பின்னால் நிற்கிறார்கள். தற்போது கோவை அதி.மு.கவில் கிட்டத்தட்ட தனிமரமாக நிற்கிறார் வேலுமணி அவருக்கு எதிராக பல காலமாக உள்ளுக்குள் பொங்கிக்கொண்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமனோ இப்போது தைரியமாக எதிர்ப்பு அரசியலை துவக்கியுள்ளார்.

ஜெயராமன் வீட்டுக்கு துக்கம் கேட்க சென்ற வேலுமணியை துரோகி என கட்சிக்காரர் ஒருவர் விமர்சிக்க, அப்போதுதான் கட்சியில் தன்னுடைய மதிப்பு என்னவென்று வேலுமணி உணர்ந்தார். அதனால்தான் தொண்டாமுத்தூரில் தான் நடத்திய கட்சிக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமனை ஓபனாக போட்டுத் தாளித்தார் வேலுமணி.

பதினோறு தோல்வி பழனிசாமியின் இந்த உரசல் எல்லாம் சோஷியல் மீடியாவில் யுத்தமாகவே வெடித்துள்ளது. வேலுமணியின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பதிவின் கமென்ட் பாக்ஸில் 'இனி எம்.எல்ஏ. பதவிக்கு கனவு காணாதே என எதிர்தரப்பு திட்ட அதற்கு அடிமைகளே வாய மூடுங்க' என எதிர் தாக்குதல் வருகிறது.

'உங்க போஸ்ட்டில் பொதுச்செயலாளர் போட்டோ எங்கே? என ஒருவர் கேட்க, 'யாரு புஸ்ஸி ஆனந்த் போட்டோவா? என நக்கலடிக்கிறார்கள். முன்பு நாகரிகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது இந்த யுத்தம் சமீபமாக ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டிக்கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக மாறியுள்ளது. அதிமுகவின் தன்மானத்துக்கு இது அழகல்ல. இதை உடனடியாக நிறுத்தாவிட்டால் ரத்தம் பார்க்காமல் விடாது" என எச்சரித்தனர்.

செ.ம.வேலுசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது "அப்படியா. அநாகரிக அரசியலை யார் முன்னெடுத்தாலும் தவறுதான். கவனிக்கிறேன்' என்றார். வேலுமணியிடம் கேட்டபோது, "கழகத்தின் கண்ணியத்துக்கு துளியளவும் களங்கம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன்" என்றார்.

கொஞ்சம் கமென்ட்ஸ் பாருங்க ஜி!

(எஸ்.ஷக்தி)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow