1-ம் தேதி பொறந்ததும் எகிறிய சிலிண்டர் விலை... உச்சக்கட்ட ஷாக்கில் பயனர்கள்..!

மாதத்தின் முதல் நாளிலேயே வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Oct 1, 2026 - 11:00
1-ம் தேதி பொறந்ததும் எகிறிய சிலிண்டர் விலை... உச்சக்கட்ட ஷாக்கில் பயனர்கள்..!

பண்டிகைக் காலம் நெருங்கும் நேரத்தில் இந்த விலை உயர்வு உணவுப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு சிலிண்டரின் விலை சுமார் ரூ.2,983 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் வணிக சிலிண்டர் விலை ரூ.62.50 உயர்ந்து ரூ.2,810 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.9.50 உயர்த்தப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் விலை குறைந்த நிலையில், தொடர்ந்து இரு மாதங்களாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, நவராத்திரி தொடங்கவுள்ள நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் சிற்றுண்டி நிலையங்களில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகரிக்கும். மேலும், தீபாவளிக்காக இனிப்புகள் மற்றும் கார வகைகளைத் தயாரிக்கவும் வணிக சிலிண்டர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும்.

இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உணவுகள், டீ, காபி மற்றும் பலகாரங்களின் விலைகள் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

குறிப்பாக, குறைந்த விலையில் உணவு வழங்கும் சாலையோரக் கடைகள் மற்றும் சிறிய உணவகங்கள் இந்த விலை உயர்வால் கூடுதல் சுமையைச் சந்திக்கக்கூடும். இதன் தாக்கம் தொடர்ந்து நீடித்தால், குறைந்த விலையில் உணவு வாங்கும் சாமானிய மக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, வணிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow