உதயநிதிக்கு போட்டி...உலக நாயகன் பெயர் மாற்றம்-தமிழிசை செளந்தரராஜன் கிண்டல்

தமிழகத்தில் உள்ள மகளிர் பள்ளிகளில் பெண் உடற்கல்வி ஆசிரியர் இருந்தால் போதும் என சட்டம் இயற்ற வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்

Nov 12, 2024 - 13:33
உதயநிதிக்கு போட்டி...உலக நாயகன் பெயர் மாற்றம்-தமிழிசை செளந்தரராஜன் கிண்டல்
உதயநிதி ஸ்டாலின், தமிழிசை செளந்தரராஜன்

சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோதில் இருந்து தற்போது வரை சிறுமழை வந்தாலும் சென்னை தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது என தமிழிசை செளந்தரராஜன் திமுக அரசை சாடி உள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் தமிழிசை செளந்தரராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  “மழை பெய்ய தொடங்கினால்,துணை முதல்வர் உடனடியாக மாநில  கட்டுப்பாட்டு மையத்திற்கு வருவார்,ஆய்வு செய்வார் அப்புறம் சென்று விடுவார்.பிறகு இந்த மழை நேரத்தில் பொதுமக்களாகிய நாம் தான் கஷ்டப்பட வேண்டிய சூழல் நிலவி வருகிறது. 

சிறிய மழை பெய்தாலும் கூட உடனடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதாக கூறிகட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து விடுவார். துணை முதல்வர் ஆய்வு செய்த விளம்பரம் இன்று மாலை வரை சேனல்களில் ஒளிபரப்பப்படும். அந்த வகையில் விளம்பரத்திற்கான ஆட்சியே தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.தற்போது முதலமைச்சர் உள்ள மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போதில் இருந்து தற்போது வரை சிறுமழை வந்தாலும் சென்னை தத்தளித்து கொண்டுதான் இருக்கிறது.  

மேலும், உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முமுவதும் திமுகவாக மாறி விட்டார் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பள்ளிகளில் பயிலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. 

தமிழ்நாட்டில் பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் உடற்கல்வி ஆசிரியர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்ற வேண்டும்.மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உதயநிதி புகழ்பாடுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் வேலையிலும் கவனம் செலுத்துவது இல்லை. தூத்துக்குடியில் உடற்பயிற்சி ஆசிரியர் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். 
தமிழகத்தில் மகளிர் பள்ளியில் பெண் உடற்கல்வி ஆசிரியர் இருந்தால் போதும் என சட்டம் போட வேண்டும். 80 ஆண்டு காலம் கருணாநிதி மட்டும்தான் தமிழை வளர்க்கவில்லை.

திட்டங்களுக்கு காமராஜர் பெயர் ஏன் பெரும்பான்மையாக இல்லை எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை கால அவகாசம் உள்ளது. ஒற்றக்கருத்துடைய கட்சி இணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியுள்ளார். ஒத்த கருத்து என்றால் ஆளும் கட்சி திமுகவை எதிர்ப்பதுதான்.திமுகவே கூட்டணி பலமாக உள்ளது என சொல்ல முடியாது.திமுகவே எங்களுடன் கூட்டணியில் இருந்தது தான்.எல்லோரும் உதிரியாக இருந்தால் உதயசூரியன் உதிக்கும். உறுதியாக இருந்தால் உதயசூரியன் உதிக்காது என்றார்.மேலும், 2026 பொறுத்தவரையில் தேசிய பாஜக ஆலோசனை பேரில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்று தமிழிசை தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow