pollachi case: தைரியமாக புகார் தெரிவித்த பெண்.. சாகும் வரை ஆயுள் தண்டனை: பொள்ளாச்சி வழக்கில் நடந்தவை என்ன?
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது கோவை மகளிர் நீதிமன்றம்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளியே தெரிய வந்தபோது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த
சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிறுதல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய நிகழ்வுகள்:
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி, பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதியபட்டது. இதனடிப்படையில்,சபரிராஜன், வசந்த குமார், சதீஷ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக களமிறங்கியது காவல்துறை.
திருநாவுக்கரசு முதலில்,’தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை’ என வீடியோ பதிவிட்டு தலைமறைவாக இருந்தார். நீண்ட தேடலுக்குப் பின் மார்ச் 5,2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது போனை ஆய்வு செய்தப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கியது.
இந்த வழக்கில் தொடர்புடைய அருளானந்தம் என்பவர் அப்போதைய அதிமுக நிர்வாகியாக இருந்தார். தமிழகத்திலும் அதிமுக தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று கொண்டிருந்த காரணத்தினால், எதிர்க்கட்சிகள் தரப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக அரசுக்கு அதிக அழுத்தம் தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டது.
இந்தியா அளவில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு பேசுப்பொருளாகிய நிலையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி சிபிஜ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சபரிராஜன், வசந்த குமார், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் தவிர்த்து அருளானந்தம், ஹெரன்பால், பாபு, அருண் என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஒட்டுமொத்தமாக 1500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 பெண்கள் நேரடியாக சாட்சி வழங்கியதோடு, குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.
9 பேரும் குற்றவாளிகள்: சாகும் வரை ஆயுள் தண்டனை
கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு மே 13 ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என கடந்த 28 ஆம் தேதி நீதிபதி நந்தினி தேவி தெரிவித்தார்.இந்நிலையில் நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்டம் குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.
பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினி தேவி அதே நீதிமன்றத்தில் பணியாற்றுவார் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர் கோவையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் சேலம் சிறையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 நபர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
120 (B) 366, 342, 354 A, 354 Β, 370, 376 D, 376 (N) and 509 of IPC, IT Act 66 E, 67, பெண் வன்கொடுமை வழக்கு Section 4 of TNPWH சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாக தண்டனைகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி.
What's Your Reaction?






