தஞ்சாவூரில் சிறுத்தை நடமாட்டமா? பரபரப்பு... அச்சமடைந்தவர்களுக்கு வனத்துறை சொன்ன ஆறுதல் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் செய்தி கொடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையிலும் அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அச்சம் நிலவி வருகிறது. வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சிறுத்தையை தேடி வருகின்றனர். அந்தப் பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடித்தனர். அதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சிறுத்தை உலவுவதாக தகவல் கிடைத்ததையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உடப்பாங்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல்கள் பரவியது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் இதுவரை சிறுத்தையின் கால் தடமோ, சிறுத்தை நடமாட்டமோ கண்டறியப்படவில்லை. எனவே இதுகுறித்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்துமே வதந்தி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுத்தை தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?