தூது அனுப்பிய விஜய்..? கண்டுகொள்ளாத ரங்கசாமி.. ஆதவுடனான சந்திப்பில் நடந்தது என்ன?
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. கூட்டணிக்காக ஆதவை தூது அனுப்பினாரா விஜய்? ரங்கசாமி எடுத்துள்ள முடிவு என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

தவெக முதல் மாநாட்டை நடத்தியதிலிருந்தே திமுகவை அரசியல் எதிரியாக கருதி, இறங்கி வேலை செய்யும் தவெக தலைவர் விஜய், அதன் கூட்டணி கட்சிகள் மீது கல்லெறிந்து வருவது ஒருபக்கம் இருந்தாலும், தங்கள் கொள்கை எதிரியாக அறிவித்துள்ள பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, தவெக-வின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை தூது அனுப்பி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் விஜய் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
பாஜகவை விட்டு வர முடியாது:
புதுச்சேரி உப்பளம் அருகே உள்ள மைதானத்தில் இளைஞர்களுக்கான 40-வது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது ரங்கசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் பாஜகவை விட்டு தன்னால் வரமுடியாது என்று திட்டவட்டமாக ரங்கசாமி கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பொறுத்தவரை அவர் விஜய்யின் தீவிர ரசிகர் மட்டுமல்ல, விஜயை நினைத்த நேரத்தில் சந்தித்து அன்பை பரிமாறக் கூடியவர். ஏற்கனவே தவெகவின் பொதுச்செயலாளராக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். கடந்தாண்டு புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளன்று அவரது வீட்டிற்கே சென்று முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ரங்கசாமியின் குடுமி பாஜகவிடம்:
இப்படி விஜய்க்கு நெருக்கமான நபராக இருந்தாலும் தவெகவுடன் கூட்டணி வைக்க ரங்கசாமி சம்மதிக்காதது ஏன் என்பது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களிடம் விசாரித்தோம். அப்போது, ரங்கசாமி விஜய்யின் தீவிர ரசிகர் தான், புதுச்சேரியில் விஜய்க்கென பெரும் ரசிகர் பட்டாளமும் உள்ளது. இதனால் தவெகவுடன் கூட்டணி வைக்க ரங்கசாமிக்கு ஆசை தான். ஆனால், ரங்கசாமியின் குடுமி பாஜகவிடம் உள்ளதால் தான் அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாமல், பாஜக கூட்டணியிலேயே இருப்பதாகக் கூறுகின்றனர்.
தனக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று ரங்கசாமி மனம் வெதும்பி பொது வெளியிலேயே பேசியிருந்தார். ரங்கசாமி, அளவுக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், அதற்கான ஒட்டுமொத்த ஆதாரங்களும் பாஜக வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், அந்த கூட்டணி வெற்றி பெற்று ரங்கசாமி முதலமைச்சராக வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அவர் முதலமைச்சரான கையோடு ஜெயிலுக்கு சென்று தான் உட்கார வேண்டும் என்று கூறுகின்றனர் புதுச்சேரி அரசியலை நன்கு அறிந்தவர்கள்.
பாஜக கூட்டணியைவிட்டு ரங்கசாமி வெளியேறினால், அடுத்த கணமே அமலாக்கத்துறையினர் ரங்கசாமிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்துவதோடு, ரங்கசாமி மீதான குற்றங்களை நிரூபிக்கும் ஆதாரங்கள் சிக்கி, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகையச் சிக்கலில் ரங்கசாமி சிக்கியுள்ளதால், அவரால் கடைசி வரைக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேற முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஒருவேளை மத்தியில் ஆட்சி மாறினால் வேண்டுமானால், ரங்கசாமி கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.
Read more: திரும்ப அழைக்காத திராவிட கட்சிகள்..தண்ணி காட்டிய த.வெ.க- அப்செட்டில் காளியம்மாள்!
What's Your Reaction?






