சிக்ஸர் மழை பொழிந்த 'மிஸ்டர் 360 டிகிரி'... பும்ராவின் மேஜிக்...ஆப்கானை ஊதித்தள்ளியது இந்தியா!

பின்பு ஜோடி சேர்ந்த இந்தியாவின் 'மிஸ்டர் 360 டிகிரி' வீரர் சூர்யகுமார் யாதவ் தனக்கே உரித்தான ஸ்டைலிஷான ஷாட்களை விளையாடி அணியை மீட்டெடுத்தார். அவருக்கு ஹர்திக் பாண்ட்யா பக்கபலமாக விளங்கினார்.

Jun 21, 2024 - 07:11
சிக்ஸர் மழை பொழிந்த 'மிஸ்டர் 360 டிகிரி'... பும்ராவின் மேஜிக்...ஆப்கானை ஊதித்தள்ளியது இந்தியா!
இந்தியா வெற்றி

ஆண்டிகுவா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 47 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸுல் நடந்து வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து, 'சூப்பர் 8' சுற்றுக்கு ஆட்டங்கள் தொடங்கி விட்டன.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ரன் சேர்க்க தடுமாறினார்கள். ரோகித் 8 ரன்னில் ஃபசல்ஹக் பாரூக்கி பந்தில் அவுட்டானார்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் (20 ரன்), நிதானமாக விளையாடிய கோலி (24 ரன்),  சிக்ஸர் மன்னன் ஷிவம் துபே (10 ரன்) ஆகியோரை ஆப்கான் கேப்டன் ரஷித்கான் தனது சுழல் வலையில் வீழ்த்தினார்.

இதனால் இந்திய அணி 11 ஓவரில் 90/4 என தடுமாறியது. பின்பு ஜோடி சேர்ந்த இந்தியாவின் 'மிஸ்டர் 360 டிகிரி' வீரர் சூர்யகுமார் யாதவ் தனக்கே உரித்தான ஸ்டைலிஷான ஷாட்களை விளையாடி அணியை மீட்டெடுத்தார். அவருக்கு ஹர்திக் பாண்ட்யா பக்கபலமாக விளங்கினார்.

5 பெளண்டரிகள், 3 சிக்சர்களுடன் அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்னில் அவுட்டானார்.  ஹர்திக் பாண்ட்யா 32 ரன்னில் வெளியேறினார். கடைசியில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினார். 

20 ஓவர் முடிவில் இந்திய அணி 181/8 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான், ஃபசல்ஹக் பாரூக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்திய வேகத்தை சமாளிக்க முடியாமல் தள்ளாடினார்கள்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்னிலும், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் (2) அடுத்தடுத்து  பும்ராவின் பந்தில் வீழ்ந்தனர். இந்த சரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியால் நிமிர முடியவில்லை. 20 ஓவர் முடிவில் அந்த அணி 134 ரன்னுக்கு ஆல்அவுட்டாகி 47 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் 'மேஜிக் ஸ்பெஷல்' வீசிய பும்ரா 4 ஓவரில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.  சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்திக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow