வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு -வனத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை நவம்பர் 28ம் தேதி தாக்கல் செய்ய வனத்துறைக்கு நீதிபதி உத்தரவு

Nov 23, 2024 - 12:50
வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு -வனத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும்  முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர், முகாமில் கலந்து கொண்ட கால்நடை மருத்துவர் வல்லயப்பனிடம் ஒப்படைத்தார். சுமார் 10 மாதங்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனத்துறையினர்  கடந்த மாதம் 26ம் தேதி  குரங்குக் குட்டியை வாங்கிச் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்த்துள்ளனர்.

அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால்,  குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை  தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வல்லையப்பன் என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருவதாக கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம்,  வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்த நிலையில், குரங்கு குட்டி, கடந்த 20ம் தேதி மரணமடைந்து விட்டது. இதையடுத்து வல்லையப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், குரங்கு குட்டி மரணம் தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, நவம்பர் 14ம் தேதி ஆரோக்கியமாக இருந்ததாக கூறப்பட்ட குரங்கு குட்டி எப்படி இறந்தது என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.எந்த தொற்றும் பாதிக்காத வகையில் 10 மாதங்கள் மனுதாரர் சிகிச்சை அளித்த நிலையில், வண்டலூர் பூங்காவில் சேர்க்கப்பட்ட  27 நாட்களில் அது இறந்திருக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து, குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை நவம்பர் 28ம் தேதி தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow