இது காமெடி படம்தானா? விமலின் 'தேசிங்குராஜா 2' சினிமா விமர்சனம்
காமெடி திரைப்படம் என படக்குழுவினரின் அறிவிப்போடு திரையில் வெளியாகியுள்ள ’தேசிங்குராஜா 2’ படம் உண்மையில் காமெடியாக உள்ளதா? இல்லையா? குமுதம் விமர்சனம் காண்க.

எழில் இயக்கத்தில் விமல், சூரி, பிந்துமாதவி கூட்டணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்குராஜா படத்தின் காமெடி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தின் பார்ட் 2 படத்தை எடுப்பதாக எழில் மீண்டும் களத்தில் குதித்தார்.
விமல், பூஜிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எழிலின் இயக்கத்தில் உருவான தேசிங்குராஜா 2 படத்தின் குமுதம் விமர்சனம் இதோ..
காமெடி படத்துக்கு எதுக்கு கதை..?
போலீஸ், மந்திரி, ரவுடி, திருட்டுக் கும்பல், ஆபாச வீடியோ, குடி, குட்டி, டான்ஸ்... இதெல்லாம் கலந்த உடான்ஸ்தான் கதை. கிளைமேக்ஸ்ல இயற்கை விவசாயம்னு ஒரு மெசேஜ்... இயக்குநர் எழிலுக்கு எப்படியும் படம் ஓடிரும்னு ஒரு நம்பிக்கைதான்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் விமல். அவரது கல்லூரி நண்பன் ஜனநாதன் ரவுடி.. ரவுடி ஒழுக்கமா இருப்பார், இன்ஸ்பெக்டர் குடி, கூத்துன்னு கும்மாளமா இருப்பார். விமலின் காதலி பூஜிதா அசிஸ்டென்ட் கமிஷனர். அவர் மந்திரி ரவிமரியாவின் மகனுக்கு சிறப்புப் பாதுகாவலரா வர, விமலின் நண்பன் ஜனநாதன் அமைச்சர் மகனைப் போட்டுத் தள்ளிவிடுகிறார். அதற்கொரு ஃபிளாஷ்பேக்.
அது முடியும்போது, மகனைக் கொன்றவனை மட்டுமல்ல; மகனையே மறந்தே போகிறார், மந்திரி. காரணம், ஓர் ஆபாச வீடியோ... அதுக்குப் பின்னால் ஒரு கதைன்னு, கால்ஷீட் தரும் காமெடி நடிகர்களைப் பொறுத்து, திரைக்கதை திருப்பமே இல்லாமல் மலை ஏறுகிறது. படத்திற்கு இசை வித்யாசாகர்.
விமல், பூஜிதா, ஜனநாதன், ஹர்ஷிதா காமெடி கம் ஆக்ஷனில் கலக்க, ரவிமரியா, புகழ், சினேகா குப்தா, சிங்கம்புலி, சாம்ஸ், லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, மதுரை முத்து, மொட்டை ராஜேந்திரன், திருச்சி சாதனா..ன்னு ஒரு பெருங்கூட்டம். பன்ச் காமெடி பண்ணி மூளைக்குப் போகும் மொத்த நரம்புகளையும் வெட்டிவிட்டனர்.
படம் முடிந்ததும் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி.. "ஆமா; எல்லாரும் எதுக்கு சிரிச்சாங்க?"
'தேசிங்குராஜா 2'- காமெடி போலீஸ்!
What's Your Reaction?






