தாராபுரம் இடைத்தேர்தல்... திருப்பூர் திமுகவில் உட்கட்சி பூசலால் அதிகரிக்கும் தலைவலி!

தாராபுரம் இடைத்தேர்தலை கைப்பற்ற திமுக தீவிரம் காட்டும் நிலையில், திருப்பூர் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இடையேயான மோதல்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Jul 26, 2026 - 15:00
தாராபுரம் இடைத்தேர்தல்... திருப்பூர் திமுகவில் உட்கட்சி பூசலால் அதிகரிக்கும் தலைவலி!

அ.தி.மு.க.விலிருந்த தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்ததை அடுத்து இடைத்தேர்தலில் தாராபுரத்தை எப்படியாவது கைப்பற்றிட வேண்டுமென தி.மு.க. தீவிரம் காட்டிவருகிறது. ஆனால், 'மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்டச் செயலாளர்களோ, கட்சியைப் பற்றி துளியும் கவலைப்படாமல் நான்கு திசைகளில் பயணித்து கட்சியை காலி செய்துகொண்டிருக்கிறார்கள்' என புலம்புகின்றனர் திருப்பூர் தி.மு.க.வினர்.

இதுபற்றி மூலனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மூத்த திமுக மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம். அவிநாசி ஆகிய தொகுதிகள் அதிமு.கவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள். மற்ற தொகுதிகளான தாராபுரம் திருப்பூர் வடக்கு திருப்பூர் தெற்கு ஆகியவை தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள், அ.தி.மு.கவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை உடைத்து, அதையும் தி.மு.க கோட்டையாக மாற்ற தலைமை முடிவு செய்து, திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்கள்

அதன்படி, திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு முன்னான் மேயர் தினேஷ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு இளபத்மநாபன் ஆகிய நால்வர் மாசெக்களாக இருந்துவருகிறார்கள் ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே இந்த நால்வரும் நான்கு திசைகளில் பயணித்துவருகிறார்கள். குறிப்பாக, திருப்பூரில் போராட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்ட குப்பை பிரச்னையை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கி அரசியல் செய்தபோது, அதை பூதாகரமாக்கும் வகையில் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வும். மாவட்டச் செயலாளருமான செல்வராஜ், சொந்தக் கட்சிக்கு எதிராகவே குப்பை பிரச்னையை கையில் எடுத்து நடுரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் கோபமடைந்த மேயர் தினேஷ். தி.மு.க தலைமைக்கு நெருக்கமான திருப்பூர் தொழிலதிபர் மூலம் காய் நகர்த்தி செல்வராஜூவை அவரது சொந்த தொகுதியான திருப்பூர் வடக்கு தொகுதியில் இருந்து பல்வடத்தில் போட்டியிட வைத்துவிட்டார் அந்த தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இல்லாததால் கடந்த தேர்தலில் செல்வராஜ் தோல்வி அடைந்தார். அதேநேரம். திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மேயர் தினேஷ்குமாரை, செல்வராஜின் ஆதரவாளர்கள் உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்தார்கள்.

பத்தாண்டு காலமாக உடுமலை தொகுதியில் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கிழக்கு மா.செ பத்மநாபனுக்கு இந்த முறையும் சீட் கிடைக்காததால் அவர் உடுமலையில் சரிவர தேர்தல் பணிகள் செய்யவில்லை. தாராபுரம் தொகுதியிலோ, திமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று இருந்த நிலை மாறி அ.தி.மு.க வெற்றி பெற்றது. காங்கேயம் தொகுதியில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், கட்சியினர் யாரையும் அனுசரித்துப்போகாததால் அதி.மு.க வேட்பாளர் என்.எஸ்.என்.நடராஜனிடம் தோற்றுப்போனார்.

இப்படியாக திரும்பிய பக்கமெல்லாம் திருப்பூரில் தி.மு.க தோல்வியை தழுவிய பின்பு, வரும் இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் நிச்சயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று தலைமை ஆசைப்படுகிறது. ஆனால், அது நிறைவேறுமா என்பது சந்தேகமே. காரணம், ஆட்சி பறிபோனதற்குப் பின்பு மாவட்டச் செயலாளர்கள் யாருமே வெளியே வரவில்லை. தோற்றுப்போன அடுத்த நாளே, மாசெ செல்வராஜ் தன் பதவியை ராஜினாமா செய்தார். தலைமை அவரை சமாதானம் செய்து ராஜினாமாவை வாபஸ் பெறச் செய்தது. 'மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இவர் ராஜினாமா செய்திருப்பாரா? இவரை ஏன் சமாதானம் செய்ய வேண்டும். இவர் இல்லையென்றால் திருப்பூரில் வேறு யாரும் இல்லையா?" என்று லோக்கல் திமுகவினர் கொதிநிலையில் இருக்கிறார்கள்.

திருப்பூரைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு திமுகவின் தேர்தல் வியூக நிறுவனமான பென் நிறுவனத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முக்கியமான பொறுப்பு கிடைத்தது. ஆனால், அவர் அங்கு இருந்துகொண்டே அதைப்போலவே பெங்களூருவில் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். மேலும், அந்நிறுவனம் மூலம் திமுக. முக்கிய விஐபிகளை சந்தித்து, எம்.எல்ஏ சீட் வாங்கித் தருவதாகவும், சர்வே எடுத்து தருவதாகவும் சொல்லி, சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்ததை தலைமை கண்டுபிடித்து, அந்த நபரை சென்னைக்கு தூக்கிச் சென்று பணத்தை வசூல் செய்தார்கள்.

இது ஊருக்கே தெரிந்த விஷயம் ஆனால், அந்த எம்எல்ஏவுக்கு மீண்டும் சீட் தருகிறார்கள். தி.மு.க தோள்விக்கு இதுவும் மிக முக்கிய காரணம் அதேபோல், தினேஷ் எம்.எல்.ஏ. பதவிக்காக திருப்பூர் மேயர் பதவியை ராஜினாமா செய்ததால் துணை மேயராக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மேயர் பொறுப்பு வகிக்கிறார். தி.மு.க. ஆகரவால் அவர் துணை மேயர் ஆகிவிட்டு, இப்போது விஜய் கட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்ததும், அவர் எங்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துவிட்டார். இப்படியாக திருப்பூர் திமுகவில் ஏகப்பட்ட குளறுபடிகள். இது தொடர்ந்தால், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறுவது இயலாத காரியம்"

திருப்பூர் முன்னாள் மேயர் தினேஷிடம் பேசினோம். "எந்த தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என தலைமைதான் அறிவித்தது. அதன்படி போட்டியிட்டோம். துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தோம். நான்கு மாத காலமாக திருப்பூர் திமுக ஆட்சிக்கும். தவெசு ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று இந்த இரண்டு மாதத்தில் மக்கள் நன்றாக தெரிந்துகொண்டார்கள் வரவிருக்கும் இடைத்தேர்தலில் தாராபுரத்தில் நிச்சயம் திமு.க வெற்றி பெறும்' என்றார்.
மாநகராட்சி கூட்டம்கூட நடக்கவில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் நம் அழைப்பை ஏற்காத நிலையில், கிழக்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபனிடம் கேட்டோம். "மிகத் தீவிரமாக களமாடியும் தாராபுரத்தில் நாங்கள் தோல்வி அடைந்ததில் வருத்தம் தான். இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியை நிச்சயம் கைப்பற்றுவோம்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow