"ரிவர்ஸ் கியர் ஆட்சி" முதல் "பெயர் மாற்ற பட்ஜெட்" வரை...அதிர வைத்த உதயநிதியின் குற்றச்சாட்டுகள்!

பட்ஜெட் முதல் சட்டம் ஒழுங்கு வரை... தவெக அரசை குறிவைத்து சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய அதிரடி கேள்விகளின் முழு தொகுப்பு!

Sep 8, 2026 - 22:30
"ரிவர்ஸ் கியர் ஆட்சி" முதல் "பெயர் மாற்ற பட்ஜெட்" வரை...அதிர வைத்த உதயநிதியின் குற்றச்சாட்டுகள்!
Udhayanidhi's Key Allegations

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026–27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, பல்வேறு காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 8) நிறைவடைந்தது.

இக்கூட்டத்தொடர் முழுவதும் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும், மக்கள் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளுக்காக பேரவையில் குரல் கொடுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாகச் செயல்பட்டார். ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8 வரை சட்டமன்றத்திலும், பேரவை வளாகத்திலும் அவர் ஆற்றிய முக்கிய உரைகள் மற்றும் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் தொகுப்பு:

"பெயர் மாற்ற பட்ஜெட்": நிதிநிலை அறிக்கை மீது விமர்சனம் :

ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நாள் முதலே திமுக அரசின் திட்டங்களுக்குப் பெயர்களை மாற்றி, புதிய திட்டங்கள் போல விளம்பரப்படுத்தி வருவதாகச் சாடினார்.

வாக்குறுதிகள் ஏமாற்றம்: 

தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட முதன்மையான வாக்குறுதிகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஸ்டிக்கர் வேலை: 

திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மடிக்கணினி திட்டத்தை "வெற்றி மடிக்கணினி திட்டம்" என்றும், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை "வெற்றி வீடு கட்டும் திட்டம்" என்றும் பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளனர். இத்தகைய செயல்களுக்காக இந்த பட்ஜெட்டிற்கு "பூஜ்ஜியம் மார்க்" வழங்கலாம்.

நிதிக்க குறைப்பும் காவிரி பிரச்சனையும்: 

கல்வித்துறைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் காவிரி நீர்வரத்து குறைந்து, ஆடிப்பெருக்கு நாளில் கூட நீர் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

திசைதிருப்பல் கைது நடவடிக்கை: 

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நேரத்தில் தாம் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், விவசாயிகள் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்த தம்மையும், திமுகவினர் மற்றும் திமுக Gen Z அமைப்பினரையும் கைது செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

வேளாண் பட்ஜெட் எதிர்ப்பு :

ஆகஸ்ட் 6 அன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்தனர்.

விவசாயிகள் பாதிப்பு: 

மேகதாது பிரச்சனை, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாதது, காவிரி நீர் வராத சூழல் போன்றவற்றால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் போவதாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்ததாக விமர்சித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: 

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

தொடர் கொலைகள்.. கவன ஈர்ப்பு தீர்மானம் :

மாணவர் அமுதன் படுகொலை: 

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்டது கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் விற்பனை குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்த காரணத்தினாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதைத் சுட்டிக்காட்டினார்.

வரிசையான குற்றங்கள்: 

திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் படுகொலை, அம்பத்தூரில் பெண் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது, காஞ்சிபுரத்தில் இரட்டை கொலை போன்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு, 100 நாள் சாதனை பேசும் அரசு சட்டம்-ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

"எங்களுக்கு கார் வேண்டாம்"

அமைச்சர் ஒருவரின் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வழங்கும் அறிவிப்பு குறித்தும் பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

அமைச்சர் மீதான குற்றச்சாட்டு: 

ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த விவகாரத்தில் அமைச்சர் சரத் மீது காவல்துறை விசாரணை நடத்தியதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சரத், அவர்கள் கூறியது போல நான் போதை பொறுக்க பயன்படுத்தியதாகவே இருந்தால், அது திமுக ஆட்சியில் தான் என்றார். உடனே பதிலடி கொடுத்த உதயநிதி, அப்போ, அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தினார்" என்று ஒப்புக்கொள்கிறாரா?என்று கேள்வி எழுப்பியதும் சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

கார் வசதி நிராகரிப்பு: 

விசிக எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று அனைத்து எம்எல்ஏகளுக்கும் கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதுகுறித்து பேரபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

நிதி நெருக்கடி காலத்தில் மக்கள் நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

'சூப்பர் சிங்கர்' விமர்சனம்: 

மேலும், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் பாடல் பாடுவதைக் கிண்டல் செய்த அவர், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் சமூக வலைதளங்களில் ரீலிஸ் ஆக வெளியாவதைச் சுட்டிக்காட்டினார்.

சட்ட ஒழுங்கு: 

ரிவர்ஸ் கியரில் செல்கிறது,கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று தவெக அரசின் 100 நாள் ஆட்சியை உதயநிதி விமர்சித்தார்.

ரிவர்ஸ் கியர் ஆட்சி: 

"திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் பயணித்தது; ஆனால் தவெக ஆட்சியில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது" என்று சாடினார்.

தேர்தல் வாக்குறுதி குறைப்பு: 

ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளதன் காரணத்தைக் கேட்டார்.

சிறை மரணங்கள் & ஆணவக் கொலைகள்: 

தவெக ஆட்சியின் 106 நாட்களில் 8 காவல்நிலைய மரணங்களும், 10 ஆணவக் கொலைகளும் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், ஆணவக் கொலைகள் 'காதல் மரணங்கள்' எனப் பெயர் மாற்றப்படுவதாகக் தெரிவித்தார்.

"முதலமைச்சர் ஓடிவிட்டாரா?"

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் துறை தொடர்பாக கேள்வி எழுப்பினால் வேறு அமைச்சர்கள் பதிலளிக்கிறார். முதலமைச்சரை நன்றாக தயார் செய்துவிட்டு திங்கள் அன்று பதிலுரை அளிக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவர் தயாராக இருக்கிறார் என்றார். தொடர்ந்து பேசிய உதயநிதி, முதலமைச்சர் தயாராக இருந்தால் இன்றே பதிலளிக்க சொல்லுங்கள் என்றார். இதற்கு உடனே எழுந்து பதிலளித்த முதலமைச்சர் விஜய், திங்கள் அன்று பதிலளிக்கிறேன்.. ஆனால் யாரும் எழுந்து ஓடிவிட கூடாது என்றார். இதனை கூறிவிட்டு அவர் உடனே அவையை விட்டு வெளியேறினார். உடனே எழுந்து பேசிய உதயநிதி, ஓடிவிட கூடாது என்று கூறிய முதலமைச்சரே தற்போது ஓடிவிட்டாரா? என்று கூறியதும் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

"கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை" 

இதனைத்தொடர்ந்து, நேற்று (செப்டம்பர் 7) முதலமைச்சர் விஜய் பதிலுரையில் திமுக மீது பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

முதலமைச்சருக்கு தகுதி இல்லை: செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவலத்துறை குறித்துப் பேசாமல் திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே முதலமைச்சர் முன்வைத்ததாகக் கூறினார்.

மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேச முதலமைச்சருக்குத் தகுதி இல்லை என்று கூறிய அவர், கனிம வளங்கள் தொடர்பான சில முக்கிய ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கு, மிசாவைப் பற்றியோ அல்லது எங்கள் தலைவரைப் பற்றியோ பேச ஒரு சதவீதம் கூடத் தகுதி கிடையாது. முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்துதான்" என்று கடுமையாக விமர்சித்தார்.

ஆகஸ்ட் 5-இல் தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய மக்கள் சார்ந்த கேள்விகளும், அதற்கு அரசு அளித்த பதில்களும் சட்டமன்றத்தில் பெரும் விவாத அலைகளை ஏற்படுத்தின.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow