டெல்லி சலோ பேரணியில் இளம் விவசாயி குண்டுபாய்ந்து உயிரிழப்பு?.. விவசாயிகளின் போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு..

Feb 22, 2024 - 11:28
Feb 22, 2024 - 22:07
டெல்லி சலோ பேரணியில் இளம் விவசாயி குண்டுபாய்ந்து உயிரிழப்பு?.. விவசாயிகளின் போராட்டம் 2 நாட்களுக்கு ஒத்திவைப்பு..

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயி உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2 நாட்களுக்கு போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனர்.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை செயல்படுத்த வேண்டும், விவசாயக்கடனை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ பேரணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மத்தியஅரசு உடனான 4-ம் கட்ட பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில் பஞ்சாப் - ஹரியானா எல்லையான கனவுரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த 3 பேர் உடனடியாக பட்டியாலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் 3 பேர் குண்டு பாய்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 
தொடர்ந்து உயிரிழந்தவர், படிண்டாவைச் சேர்ந்த 23 வயது இளம் விவசாயியான சுப் கரண் சிங் என தெரியவந்துள்ளது. சிறு வயதிலேயே தாயை இழந்ததால், பாட்டி வளர்த்த சுப் கரண், தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர் உயிரிழப்பைத் தொடர்ந்து விவசாயிகள் - காவல்துறையினர் இடையே நடந்த மோதலில் காவலர்கள் 12 பேரும் விவசாயிகள் பலரும் காயமடைந்தனர். இதனிடையே டெல்லி சலோ போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சுப் கரண் சிங் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/What-is-Vijays-qualification-to-be-the-chief-in-charge-of-the-party-2-crore-target...-The-leadership-set-the-target

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow