ஒகேனக்கலில் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்…

May 12, 2024 - 14:04
ஒகேனக்கலில் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்…

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் குடியிருந்த மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு  உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் 5 தலைமுறைகளாக ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர், நீதிமன்ற உத்தரவுப்படி யானை வழித்தடம் மற்றும் வாழ்விடங்களில் குடியிருப்பதாக கூறி அவர்களை வனத்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று முன்தினம் எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு ஆகிய பகுதிகளில் குடியிருந்த 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டி, வீடுகளை உடைத்து பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டில் இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே தள்ளியதாகவும் தெரிகிறது. 

இதில் காயமடைந்த 3 பேர் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளின் செயலுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு கண்டனம் எனக் கூறியுள்ளார். 

மேலும், “மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow