மதுரை அரசிக்கு கல்யாணம்… மாங்கல்யம் மாற்றிக் கொண்ட பெண்கள்... 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து

Apr 21, 2024 - 11:58
மதுரை அரசிக்கு கல்யாணம்… மாங்கல்யம் மாற்றிக் கொண்ட பெண்கள்... 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

திருவிழா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் தற்போது சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கடந்த 19-ம் தேதி,  திக் விஜயம் 20-ம் தேதியும் நடைபெற்றது. 
 
தொடர்ந்து சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.  சுவாமியும் அம்மனும் அதிகாலையிலேயே அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளி,  பின்னர் 4 சித்திரை வீதிகளில் பவனி வந்தனர். அப்போது திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது.
 
இதனை தொடர்ந்து கோயில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் வெட்டிவேர்,  வண்ணப்பூக்கள், பச்சரிசி, நவதானியம் உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனி தனியாக எழுந்தருளினர். மேலும்,  சுப்பிரமணிய சுவாமி  - தெய்வானை, மற்றும் பவளகனிவாய் பெருமாளும் எழுந்தருளினர்.
 
இதையடுத்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும் அம்மனுக்கும் கோயில் சார்பில் பட்டு சாற்றப்பட்டு வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. பின்பு பவளகனிவாய் பெருமாள் தனது தங்கையான மீனாட்சியம்மனை தாரை வார்த்து கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 
 
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் முடிந்தவுடன் கோயிலில் இருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புது மாங்கல்யம் மாற்றிக் கொண்டனர். மேலும், சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.  பக்தர்கள் விருந்து சாப்பிட்ட பிறகு கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய் பந்தலில் மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொண்டனர். 
 
திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக ரூ.30 லட்சம் மதிப்பில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் இருந்து 10 டன் வண்ண மலர்கள் கொண்டு வரப்பட்டு கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டது. மேலும், பக்தர்களின் வசதிக்காக 20 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் 300 டன் தற்காலிக ஏசி பொறுத்தப்பட்டது. 1 லட்சம் பைகளில் தண்ணீர் பாட்டில் மற்றும் தாலிக் கயிறு அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.
 
மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தால் மதுரை மாநகரமே களைகட்டியுள்ளது. தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow