தெலுங்கில் அறிமுகமாகிறார் துருவ் விக்ரம்
தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100 மற்றும் மங்களவாரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த அஜய் பூபதியின் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்ய வர்மா. முதலில் இந்த ரீமேக்கை இயக்குநர் பாலா இயக்கினார். பின்னர் சில பிரச்னைகள் காரணமாக பாலா அத்திரைப்படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு வேறொரு இயக்குநரைக் கொண்டு எடுக்கப்பட்டு அப்படம் ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் வெளியானது. வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் நடிப்பு பரவலான கவனம் பெற்றது.
அதற்கடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘பைசன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். வாழை படத்தின் வெற்றிக்குப் பிறகு பைசன் படத்துக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
பைசன் படத்துக்கு அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதியின் படத்தில் துருவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மங்களவாரம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் அஜய் பூபதி. மங்களவாரம் திரைப்படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்கிற பெயரில் வெளியானது. இப்படத்தின் நாயகியான ராஜ்புத் பாயலின் அரை நிர்வாணப் புகைப்படத்தைக் கொண்ட போஸ்டர் வெளியிடப்பட்டு அது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்ப்ட்ட இந்தியப் படங்களின் பட்டியலில் மங்களவாரமும் இடம் பெற்றிருந்தது.
மங்களவாரத்துக்குப் பிறகு அஜய் பூபதி இயக்கவிருக்கும் திரைப்படத்தில்தான் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்குத் திரையில் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
What's Your Reaction?