சூர்யா, கார்த்தி இருவருமே எனக்கு வழிகாட்டியவர்கள் - டொவினோ தாமஸ் உருக்கம்
நடிகர் சூர்யா, கார்த்தி இருவருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து மெய்யழகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தியிருக்கிறார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.
உன்னதமான காதல் அனுபவத்தைத் தந்த '96' திரைப்பட இயக்குநர் பிரேம் குமாரின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம்தான் மெய்யழகன். இத்திரைப்படத்தில் கார்த்தியும் அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான '2டி என்டர்டெயின்மென்ட்' இத்திரைப்படத்தை தயாரித்திருக்கும் நிலையில் நாளை செப்டம்பர் 27ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் தென்னிந்திய திரைப் பிரபலங்கள் பலரும் இத்திரைப்படம் வெற்றி பெற தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்றைக்கு மலையாளத்தில் முன்னணி இளம் நடிகராகத் திகழும் டொவினோ தாமஸ் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் சூர்யா, கார்த்தி ஆகிய இருவருடனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
'மெய்யழகன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதை ஒட்டி அதனைப் பாராட்டும் விதமாக “மெய்யழகன் திரைப்படத்திற்காக கார்த்தி சாருக்கும், அரவிந்த்சாமி சாருக்கும் எனது வாழ்த்துகள். சூர்யா சாருக்கும், இயக்குநர் பிரேம் குமார் சாருக்கும் காதலும் மரியாதையும்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று அவர் சூர்யா, கார்த்தியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “நடிகராக வேண்டும் முடிவோடு தீவிரமாக வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த காலங்களில் இவர்கள் இருவரும் எனக்கு திரைத்துறைப் பயணத்துக்கான வழியைக் காட்டியவர்கள். எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள். இன்று இந்த இரண்டு அருமையான மனிதர்களுக்கு நடுவே நிற்கிறேன். என்னுடைய திரைப் பயணத்தில் இவர்கள் இருவரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்” என்று சொல்லி விட்டு மெய்யழகனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் டொவினோ தாமஸ்.
What's Your Reaction?