நிதிக்காகவா? உதயநிதிக்காகவா?... பிரதமரை சந்தித்தது ஏன்? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பிரதமரிடம் தமிழகத்திற்காக நிதி வாங்க சென்றாரா? அல்லது தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஆசிவாங்க சென்றாரா என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை கூட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றது குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்விகளை எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “முல்லை பெரியார், காவிரி, பாலாறு, கட்சதீவு போன்ற உரிமைப் பிரச்சினை போன்ற பிரச்சனைகளுக்கு கேள்வி கேட்க நாதி இல்லை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கு கல்விக்கு நிதி, மெட்ரோ நிதி போன்றவற்றை மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தர அரசுக்கு யோக்கியதை இல்லை, அதே போல் மீனவர் பிரச்னையை தீர்க்க முதலமைச்சருக்கு திராணி இல்லை, இன்றைக்கு பாரத பிரதமரை முதலமைச்சர் சந்தித்து, தமிழகத்துக்கு வர வேண்டிய கல்வி நிதி, வெள்ள நிதி, ஜிஎஸ்டி, ஆகியவற்றை எடுத்து சொல்லுவாரா? இல்லை தனது புதல்வனுக்கு துணை முதலமைச்சராக்க அனுமதி பெறவா? தமிழக உரிமைக்காக பேசுவாரா இல்லை, தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக ஆசி பெறவா? ஆண்டவனுக்கு தான்வெளிச்சம்” என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
What's Your Reaction?