விஜயகாந்த் AI டெக்னாலஜியில் நடிக்க அனுமதி இல்லை... அப்போ GOAT வெங்கட் பிரபு சொன்னது பொய்யா..?

விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜியில் படங்களில் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என தேமுதிக தரப்பில் இருந்து அதிரடியாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Jul 5, 2024 - 15:45
விஜயகாந்த் AI டெக்னாலஜியில் நடிக்க அனுமதி இல்லை... அப்போ GOAT வெங்கட் பிரபு சொன்னது பொய்யா..?
கேப்டன் விஜயகாந்த்

சென்னை: சினிமா, அரசியல் என இரண்டிலும் செம்மையாக மாஸ் காட்டியவர் கேப்டன் விஜயகாந்த். புரட்சிக் கலைஞர் என்ற பெயருக்கேற்ப சினிமாவில் தன்னுடன் பயணித்தவர்களுக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம். விஜயகாந்தின் சண்டைக் காட்சிகளுக்கு இப்போதும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. சினிமாவைப் போலவே அரசியலில் அதிரடியாக செயல்பட்ட விஜயகாந்த், கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் உயிரிழந்தார். இதனையடுத்து நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர், அவரை தங்களது படங்களில் ஏஐ மூலம் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சித்து வருகின்றனர். ஏஐ டெக்னாலஜி மூலம் ஒருவரது உருவம், குரல் ஆகியவற்றை மிக தத்ரூபமாக உருவாக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. லால் சலாம் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில், மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பாம்பே பாக்யா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தியிருந்தார் ஏஆர் ரஹ்மான். அதேபோல், விஜய்யின் தி கோட் படத்தில் இருந்து வெளியான செகண்ட் சிங்கிளில், பவதாரிணியின் குரலை பயன்படுத்தியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இந்த இரண்டும் ஏஐ டெக்னாலஜி மூலமே சாத்தியமானது. 

இதே பாணியில் தி கோட் படத்தில் விஜயகாந்தையும் வெங்கட் பிரபு நடிக்க வைத்துள்ளதாக சொல்லப்பட்டது. இதுகுறித்து வெங்கட் பிரபு தரப்பில் இருந்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைக்க வெங்கட் பிரபு அனுமதி கேட்டதாக கூறியிருந்தார். அப்போது தேர்தல் நடந்து கொண்டிருந்ததால், அதற்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அதேபோல் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜயகாந்தை ஏஐ மூலம் நடிக்க வைக்க விஜய் ஆண்டனி முயற்சித்ததாக சொல்லப்பட்டது. 

இதேபோல் மேலும் சில இயக்குநர்கள், அவர்களது படங்களிலும் விஜயகாந்தை ஏஐ மூலம் ஸ்க்ரீனில் கொண்டுவர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விஜயகாந்தை திரையில் பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. இதனையடுத்து தேமுதிக தரப்பில் இருந்து இந்த சர்ச்சையான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. சில படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் இதுபோன்ற செய்திகள் வருவதாகவும், ஆனால் இந்த மாதிரியான அறிவிப்புகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தை திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகங்கள், இசை வெளியீட்டு விழாக்கள் ஆகியவற்றில் தெரிவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில், தி கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ மூலம் நடித்துள்ளாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow