CM அங்கிள் இதுக்கே நடுக்கமா? – சரமாரியாக கேள்வி கேட்ட DMK ITWING.!
திமுக, அதிமுக அரசாங்கத்தில் நடந்தால் ஊழல், தவெக அரசாங்கத்தில் நடந்தால் தவறா? என்று கேள்விக் கேட்ட சமானிய குடிமகனை தவெக அரசு கைது செய்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், இதுதொடர்பாக காட்டமாக விமர்சித்துள்ளது திமுக ஐடி விங்.
இதுதொடர்பாக, திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், ”கோவில் நிலங்களைச் சூறையாடிய கொள்ளையர்கள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். அவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் மனிதர்கள் மீது சட்டத்தின் கரம் பாயவில்லை. அரசு விதிகளையும், அறநிலையத்துறைச் சொத்துகளையும் தாராளமாகத் தாரைவார்த்துப் பத்திரம் பதிவு செய்த பதிவாளர் மீது எந்த கைது நடவடிக்கையும் இல்லை. தன் துறையின் கீழ் நடக்கும் இமாலய ஊழல்களைக் கூடக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத, நிர்வாகத் திறனற்ற அமைச்சர் சொகுசாகத் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
https://x.com/DMKITwing/status/2077609444297650527?s=20
கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டிய ஒரு சாமானியக் குடிமகனை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது இந்த பாசிச தவெக அரசு.
ஏன் இந்த நடுக்கம், சிஎம் அங்கிள் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவைக் கண்டே உங்கள் ஆட்சி அதிகாரம் நடுநடுங்கிப் போய்விட்டதா? ஒரு போஸ்ட்டைப் பார்த்தே இப்படித் தொடை நடுங்கிப் போய், அடக்குமுறையை ஏவி விடுவதுதான் நீங்கள் பேசும் ஜனநாயகமா? உங்கள் அரசை விமர்சித்தால், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் சிறைவாசம் தான் பரிசா?
ஆட்சியைத் திறம்பட நடத்தத் துப்பில்லை, ஆனால் விமர்சிப்பவர்களை வேட்டையாட மட்டும் காவல்துறை ஏவல்துறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தான் உங்கள் மாற்றமா.?
இந்த அவசரக் கைதுகள் காட்டுவது உங்கள் அதிகார பலத்தை அல்ல; உங்கள் பலவீனத்தையும், மக்கள் மீது நீங்கள் கொண்டுள்ள பயத்தையும்தான்.
கைது செய்வதிலும், வாய்பூட்டுப் போடுவதிலும் காட்டும் இந்த அசாத்திய ஆர்வத்தை, உருப்படியாக ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் காட்டுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள், அதைவிடுத்து, விமர்சிப்பவர்களின் குரல்வளையை நசுக்கப் பார்த்தால், மக்கள் மன்றம் உங்களுக்குப் பாடம் புகட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், உரிமைக் குரல் ஓயாது, தொடர்ந்து தவெக அரசின் ஊழல், லஞ்சம் நிர்வாக திறன் குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருப்போம்” என்று பதிவிட்டுள்ளது.
What's Your Reaction?



