பவள விழா பாப்பா, பழைய டப்பா, அநீதி, அராஜகம், தில்லுமுல்லு: திமுக மீது விஜய் சராமரி அட்டாக்

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், "தமிழகத்தில் எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெக-வால் மட்டுமே வீழ்த்த முடியும்" என்றும், அநீதி, அராஜகம், தில்லுமுல்லு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பவள விழா பாப்பா, பழைய டப்பா, அநீதி, அராஜகம், தில்லுமுல்லு: திமுக மீது விஜய் சராமரி அட்டாக்
திமுக மீது விஜய் சராமரி அட்டாக்

தமிழக வெற்றி கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், "தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள். நீங்கள் எங்களுடைய மிகப்பெரிய பலம். உங்களை நம்பி தான் நானும், நமது கட்சியும் இருக்கிறோம்.

1977 ஜூன் மாதம் எம்ஜிஆர் ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார். அண்ணாதுரை இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டதை நினைத்து எண்ணி, எண்ணி கண்ணீர் வடித்தேன் என எம்ஜிஆர் கூறினார். அன்றைக்கு அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் அதிமுக என சொன்னார்.

அதே மாதிரி 2017, 2021ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் நிலைமையை யோசித்து பார்த்த மக்கள், காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலைமை ஏற்பட்டது என்று கண்ணீர் வடித்தார்கள். இன்றைக்கு கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக்கழகம். இப்படி எல்லாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள்.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது, தேர்தலில் வெற்றி பெற்ற போது கூட சட்டப்பேரவையில் ஒரு நடிகர் கட்சி வந்து இருக்கிறதாம், ஏதோ ஒரு புதிய கட்சி வந்து இருக்கிறது என கேலியும், கிண்டலும் செய்தனர். யார் அரசியலுக்கு வந்தாலும் கொந்தளிப்பது தான் அவர்களுடைய வேலை.

அவர்கள் செய்யும் அட்ராசிட்டி பற்றி நாம் எடுத்து சொன்னால், அவர்கள் செய்யும் ஊழல் குறித்து நாம் எடுத்து சொன்னால், 50 ஆண்டுக்கு முன் இருந்த அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்.இன்றைய டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருத்தால் இந்த தீயசக்தி திமுக பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார். ஒரு கற்பனையாக, “அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம்   திமுக முதற்றே உலகு" என எழுதியிருப்பார்.

மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படி இருக்கட்டும். மாபெரும் மக்கள் கூட்டணி சக்தியை கொண்ட நாம் ஒரு அணி ஒருபக்கம், திமுக கூட்டணி ஒருபக்கம், பாஜக, கூட்டணி மற்றும் பலர். எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெகவால் மட்டும் தான் முடியும். விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்; ஜார்ஜ் கோட்டையில் தவெக ஆளும் கட்சியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow