இணையும் தவெக – பாமக...? தனித்து விடப்படும் விசிக..?
தவெகவும் பாமகவும் இணக்கம் காட்டிக் கொண்டிருப்பதால், கூட்டணி உறுதியாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விசிக வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தில் சமீப காலமாக குதிரை பேரத்தின் மூலம் பல கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் என கொத்து கொத்தாக பனையூரை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், அங்க சுத்தி இங்க சுத்தி என்.டி.ஏ கூட்டணி கட்சிகளை தன் பக்கம் வளைக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி தவெகவின் சனிக்கிழமை சம்பிரதாயத்தில், கூட்டணியில் பாமகவை இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவழியாக, சின்ன டாக்டர் பெரிய டாக்டர் பிரச்னைகள் தீர்ந்து தைலாபுரம் இப்போதுதான் பல்வேறு பிரச்னைகளை கடந்து, அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, என்.டி.ஏ கூட்டணியை விட்டு விலகும் முடிவை பாமக எடுத்துள்ளதாகவும், ஆளும் தவெகவுடன் இணக்கம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு கொடுத்திருந்தார் அன்புமணி. அப்போது அன்புமணியை அமைச்சர் தன்னுடைய நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்தது பெரும் பேசு பொருளாக மாறியது. காரணம், தவெக – பாமக இணக்கம் காட்டுவது, கூட்டணியில் இருக்கும் இடதுசாரி கட்சியான விசிகவிற்கு எதிரானது என்றும், இதனால் விசிக கூட்டணியை விட்டே வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவித்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இணைந்து இன்று(ஜூலை 16) காலை பேட்மிண்டன் விளையாடினர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சீனியர் பேட்மிண்டன் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தொடக்கிவைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்த பேட்மிண்டன் வீரர்களுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனாவும், அன்புமணி ராமதாஸும் விளையாடினர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை பாராட்டி பேசினார். அதாவது இதுவரை இருந்த விளையாட்டு அமைச்சர்களைவிட ஆதவ் அர்ஜுனா வித்தியாசமானவர் என்று குறிப்பிட்ட அன்புமணி, ஆளும் தவெக அரசிற்கு புகழாரம் சூட்டினார்.
அன்புமணியை பொறுத்தவரை ஆளுங்கட்சிகளை எப்போதுமே கடுமையாக விமர்சிக்க்க் கூடிய நபர். ஆனால், தவெக ஆட்சி அமைந்தததில் இருந்து தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமக இணைந்துள்ளதா? ஒருவேளை கூட்டணி உறுதியானால் விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அமைச்சரவையில் இருந்து விலகுமா விசிக? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த போதே பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் திருமாவளவன். அதாவது எந்த கூட்டணியில் பாமக இருக்கிறதோ அந்த கூட்டணியில் விசிக இருக்காது என்ற நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில் ஒரு வேளை பாமக தவெக கூட்டணி அமைக்கும பட்சத்தில் அக்கூட்டணியில் விசிக இடம்பெறுவது 100 சதவிகித வாய்ப்புகள் குறைவு என்று அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
What's Your Reaction?



