திமுக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது- முன்னாள் அமைச்சர் பேச்சு

எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்.இந்த இயக்கம்  ஒருபோதும் வீண் போகாது. இந்த கட்சிக்கு சோதனை வரும்போதெல்லாம் தொண்டர்கள் விழித்தெழுவார்கள், இயக்கத்தை தூக்கி நிறுத்துவார்கள்

Oct 10, 2024 - 21:53
திமுக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது- முன்னாள் அமைச்சர் பேச்சு

திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்குள் புகைச்சல், குழப்பம் நிலவி வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரபாண்டியம் பேரூர் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், “ கட்சியில் உழைப்பவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் இருந்தால் தான் ஒன்றியத்திலோ, பேரூராட்சியிலோ பதவிகள் வாங்க முடியும். அதற்கு முதலில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, வலுவாக போற்றக்கூடிய உன்னதமான நடுநிலையான கட்சியாக உள்ளது.
அதிமுகவின் நிலை என்பது வெற்றியை நோக்கி செல்வது. தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று  பாமர மக்களுக்கு நல்லது செய்யும்.மேலும், தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலும் வெளிநாட்டிலும் இருப்பவர்களிடையே திமுக ஆட்சி மீது வெறுப்பு வந்துள்ளது. அதிமுக மீது விருப்பம் வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்தார்கள் வேறு கதை ஆகிவிட்டது. காங்கிரசுக்கு விழுந்த ஓட்டே திமுக தனக்காக விழுந்த ஓட்டு என்று எண்ணிக்கொண்டது.அடுத்த வரப்போகும் தேர்தல் அதிமுகவிற்கான தேர்தல். நாம் வெற்றி பெறுவது என்பது நூறு சதவீதம் உறுதி. தேர்தல் நேரத்தில் நம்முடைய பணி நன்றாக இருக்க வேண்டும். டீக்கடை பிரச்சாரங்கள், திண்ணை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்.நம்மளுடைய பணி சிறக்க வேண்டும் என்று சொன்னால் நமது உழைப்பை கொடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களை அதிமுக வெல்லும் ஜெயலலிதா, எம்ஜிஆரின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அமைந்தே தீரும்.


திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய தேவையான பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்படைகின்றனர்.திமுகவில் அங்கம் வகிக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரிவாக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு பிரிவாக உள்ளது. அவரவர்கள் போராட்டத்தை அறிவிக்கின்றனர். அவர்களுக்குள்ளே ஒரு பிரச்னை உருவாகிக் கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பவர்களுக்கு புகைச்சல் வந்துள்ளது.மேலும் அவர்களுக்குள் குழப்பம் நிலவி வருகிறது.இத்தகைய சூழ்நிலையை அதிமுக சரியாக பயன்படுத்தி எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களையும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களையும் மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரித்து அதிமுகவை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்.இந்த இயக்கம்  ஒருபோதும் வீண் போகாது. இந்த கட்சிக்கு சோதனை வரும்போதெல்லாம் தொண்டர்கள் விழித்தெழுவார்கள், இயக்கத்தை தூக்கி நிறுத்துவார்கள்” என பேசினார் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow