"காசு இல்லாத உனக்கு வீடு எதுக்கு".. 15 வீட்டுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்.. கமிஷன் கவுன்சிலரின் அடாவடி
சிங்கம் திரைப்பட பாணியில் சென்னையில் புதிதாக வீடு கட்டி வரும் முதியவரை மிரட்டி பணம் கேட்டதாக திமுக நிர்வாகிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் 74 வயதான மண்ணு ரமணய்யா. இவர் சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் 15 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டடப் பணி தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், 188-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம், தனது ஆதரவாளர்களை வைத்து ரமணய்யாவிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருமுறை மிரட்டிச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் 3 பேர் அவரை மிரட்டி தாக்கியதாக தெரிகிறது.
இதில், காயமடைந்த மண்ணு ரமணய்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆந்திர மாநிலத்திலிருந்து வந்து வீடு கட்டுவ, பணம் கேட்டா தரமாட்டியா?" என திமுக நிர்வாகிகள் மிரட்டி பணம் கேட்டதாக கூறினார்.
இதனிடையே சென்னை மாநகராட்சி 14-மண்டலத்துக்குட்பட்ட அதிகாரிகள் சிலர் வந்து, விதிகளை மீறி கால்வாய் அமைத்ததாக கூறி அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
தொடர்ந்து திமுக நிர்வாகிகள் தாக்கியது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் மண்ணு ரமணய்யா புகார் அளித்துள்ளார். சிங்கம் திரைப்படத்தில் புது வீடு கட்டும் ஒருவரை, வில்லன் பிரகாஷ்ராஜ் மிரட்டி பணம் கேட்பதுபோல் கவுன்சிலரின் தூண்டுதலின் பேரில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?