முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரி வெட்டு.. திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்..

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியரை தனியாக வரவழைத்து, முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள தண்ணீர்குளம் தண்டலம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். 27 வயதான இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு, லோன் தவணை கட்டுவதாகவும், அதற்காக நேரில் வரச்சொல்லியும் செல்போனில் அழைப்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கூறியபடி ஐ.சி.எம்.ஆர் பின்புறம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளார் அஜித்குமார். அங்கு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாத நிலையில், தனியாக வந்த அஜித்குமாரை 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி தாக்குதல் நடத்தியதோடு, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர்.
உயிரை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்தில் இருந்து ரத்த வெள்ளத்தில் பைக்கில் புறப்பட்ட அஜித்குமார் ஒரு கட்டத்தில் கீழே விழுந்து நிலையில், கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்க, அவர்கள் வந்து அஜித்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தலை, முதுகு உள்ளிட்ட உறுப்புகளில் காயமடைந்த அஜித்குமாருக்கு 50 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், லோன் தவணையை கட்டச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் அஜித்குமார் தாக்கப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






