வேங்கை வயல்: ஆதாரம் இல்லாமல் கைது பண்ணுவோமா? சிபிசிஐடி விளக்கம்
வேங்கை வயல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக உரிய ஆதாரம் உள்ளதால் அவர்களை விடுவிக்கக் கூடாது என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெளியே வந்தது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் இரண்டு வருடங்களாக விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள வேங்கை வயலைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேரும் நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பிணை மனு தாக்கல் செய்து அன்றைய தினமே நீதிமன்றத்தில் பிணை பெற்றனர்.
கடந்த 20-ஆம் தேதி மூவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இந்த வழக்கிற்கும், தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. எனவே தங்கள் மூன்று பேரையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாக மூன்று பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, சிபிசிஐடி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் உள்ள கருத்துக்களை எடுத்துக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூவரும் நிரபராதிகள் என்றும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது இன்று (ஏப்ரல் 3) விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு தொடர்பு இல்லை எனவும் தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் மனு அளித்தனர்.
சிபிசிஐடி போலீசார் சார்பில் தங்களிடம் உரிய ஆதாரம் உள்ளதாகவும் அவர்களை விடுவிக்க கூடாது எனவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
What's Your Reaction?






